ஜி.எஸ்.டி. மற்றும் உள்ளாட்சி கேளிக்கை வரியால் ஆட்டம் கண்டுள்ள தமிழ் சினிமா, நடிகர் – நடிகைகளின் தினசரி செலவும் குறைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
ஜி.எஸ்.டி. என்ற ஒற்றை வார்த்தை, ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப் போட்டுவிட்டது. அதுவும் குறிப்பாக, தமிழ் சினிமா ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளது. காரணம், ஜி.எஸ்.டி.யோடு சேர்ந்து உள்ளாட்சி கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டிருப்பதுதான். இதிலிருந்து மீள, நடிகர் – நடிகைகள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஆனால், சினிமாவில் பாடல்கள் மற்றும் வசனங்கள் எழுதிவரும் மதன் கார்க்கி, எல்லோருக்கும் முன்னுதாரணமாக தான் வாங்கிவந்த சம்பளத்தில் இருந்து 15 சதவீதத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்தார். ஆனால், இதுவரை ஒரு நடிகர், நடிகை கூட சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், படப்பிடிப்பின்போது நடிகர் – நடிகைகளுக்கு ஆகும் செலவையும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஒரு முன்னணி நடிகர் அல்லது நடிகைக்கு, கேரவன், டிரைவர் பேட்டா, பெரிய ஹோட்டலில் சாப்பாடு என ஒரு நாளைக்கு குறைந்தது 80 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகிறது.
ஒரு நாளைக்கு ஒரு லட்சம் என்றால், மொத்த படப்பிடிப்பும் முடியும்வரை எவ்வளவு ஆகும் என்று கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். எனவே, இந்த செலவையும் குறைத்துக்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.