விஜய் டிவில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர் பாலா. தற்போது திரைப்படங்களிலும் நடித்து வரும் பாலா, ஏழை எளிய மக்களுக்காக பல உதவிகளையும் செய்து வருகிறார்.குக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை, பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் என பாலா செய்து வரும் உதவிகள் தினம் தோறும் ட்ரெண்டாகி வருகின்றன.
இதையடுத்து பாலா கதாநாயகனாக காந்தி கண்ணாடி என்ற படத்தில் நடிக்க அந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தில் பாலாஜி சக்திவேல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஷெரிஃப் என்பவர் இயக்கி இருந்தார். படம் திரையரங்கு மூலமாக 2.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது பாலா மற்றும் காந்தி கண்ணாடிப் படக்குழுவினர் மேல் தமிழகத்தைச் சேர்ந்த சிவசேனா கட்சியினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். காந்தி கண்ணாடி படத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் விதமாகக் காட்சிகள் உள்ளதாகவும், அதனால் படக்குழுவினர் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர்களின் புகாரில் கூறியுள்ளனர்.