சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான அவரது கூலி திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், ரஜினியின் இந்த புதிய வீடியோ அவரது அசைக்க முடியாத உழைப்பையும், அர்ப்பணிப்பையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் 'பவர்ஹவுஸ்' என்றும், 'சூப்பர் ஸ்டாரின் ஆரா' என்றும் சிலாகித்துப் பாராட்டி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் நேற்று உலகெங்கும் வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசியிருந்தார். "வயது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே, உடல் வலிமையும் மன வலிமையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்" என்பது போன்ற அவரது கருத்துக்கள் அப்போது பெரிதும் கவனம் பெற்றன. ரசிகர்கள் ரஜினியின் இந்த பேச்சினை வைத்து பல ரீல்களை உருவாக்கி பகிர்ந்து வந்த நிலையில், தற்போது வெளியான அவரது உடற்பயிற்சி வீடியோ அந்தப் பேச்சிற்கு மேலும் வலு சேர்ப்பது போல் அமைந்துள்ளது.
இந்த வீடியோவானது கூலி படத்தின் வெற்றிக்கு மேலும் ஒரு உந்து சக்தியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.