நடிகர் கார்த்தி இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் "சுல்தான்" படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் உள்ள கோவிலுக்கு அருகில் நடைபெற்றுள்ளது. இதை அறிந்த சில இந்து அமைப்புகள் திண்டுக்கல் மலைக்கோட்டையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே முதல் ஏற்பட்டு படப்பிடிப்பு கருவிகளை உடைக்க முற்பட்டுள்ளனர்.
இதையடுத்து படக்குழு எவ்வளவு பரிந்து பேசியும் படப்பிடிப்புக்கு அனுமதிக்காத ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் " படத்தின் பெயரை சுல்தான் என வைத்துக்கொண்டு இந்த கோவில் பகுதியில் படப்பிடிப்பு நடத்துவது ஏற்கமுடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஆர்.எஸ் .எஸ் அமைப்பிற்கு விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள "சுலதான்" படக்குழு, "திப்பு சுல்தானின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சுல்தான் படம் எடுக்கப்படுவதாகவும், திண்டுக்கல் மலைக்கோட்டையில் எடுக்கக் கூடாது என்றும் கூறி இரு அமைப்பினர் கடந்த 24.09.2019 அன்று படப்பிடிப்பு தளத்தின் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் வெளியிட்ட கருத்துகளால் இருவேறு அமைப்புகளிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
ஆனால் "சுல்தான்" படம் வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல. சமீப காலங்களாக சுய விளம்பர நோக்கில் திரைப்படங்களை தனி நபர்களும், சில அமைப்புகளும் தாக்குவது அதிகரித்து வருகிறது. ஒரு திரைப்படம் எதை காண்பிக்க கூடாதென்பதை உறுதி செய்யும் உரிமை தணிக்கைக் குழுவிற்கு உள்ளது. மேலும் என்ன காண்பிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை படத்தின் படைப்பாளிக்கு உள்ளது இது நம் நாட்டின் சட்டம் நமக்கு அளிக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் ஆகும்.
எனவே எந்தவொரு அமைப்போ, தனி நபரோ படைப்பாளிகளின் சுதந்திரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் வரலாற்று தலைவர்களுக்கும், தேசிய தலைவர்களுக்கும் சாதி மத அடையாளங்கள் பூசி அவர்களின் வாழ்வையும் நமது வரலாற்றையும் கொச்சைப்படுத்தும் செயல்களுக்கும் எங்களின் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம்” என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளனர் சுல்தான் படக்குழுவினர்.