மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யம் பற்றி இணையத்தில் பரவும் வதந்திகளுக்கு அவரது மகன் எஸ் பி சரண் விளக்கமளித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சென்னையில் உள்ள எம் ஜி எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் அவர் உயிரிழந்தார். அவரின் உடல் அவர் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் இப்போது அவரின் மருத்துவ செலவுகள் பற்றி வதந்தி ஒன்று இணையத்தில் பரவியது.
அதில் ‘எஸ் பி பிக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு அவரின் குடும்பம் மீதித் தொகையை செலுத்தவில்லை. இதுகுறித்து தமிழக அரசிடம் அவரின் குடும்பம் முறையிட அவர்கள் பணத்தைக் கட்ட முடியாது என சொல்லிவிட்டனர். இதையடுத்து மீதிப் பணத்தை துணைக் குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கட்ட அதன் பின்னரே எஸ் பி பியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது’ என வெளியானது.
ஆனால் இதை முழுவதுமாக மறுத்துள்ளார் எஸ் பி பியின் மகன் சரண். மேலும் அவர் ‘இதுபோன்ற செய்திகளை எப்படி மனிதர்கள் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. இது எங்கள் குடும்பத்தை எப்படி பாதிக்கும் என அவர்கள் அறிவார்களா? விரைவில் நானும் மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து மருத்துவமனைக் கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடுவோம். அதுவரை பொய்யான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்.’ என வீடியோ மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.