விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாட்ரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸாகி கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது. 12 ஆண்டுகள் கழித்து ரிலீஸான ஒரு படம் இந்தளவுக்கு வசூலிப்பது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் வெற்றி தனக்கும் துருவ நட்சத்திரம் மேல் நம்பிக்கையைக் கொடுப்பதாக இயக்குனர் கௌதம் மேனன் பேசியுள்ளார்.
மத கஜ ராஜா போல ரிலீஸாகாமல் முடங்கிக் கிடக்கும் சில எதிர்பார்ப்புக்குரிய படங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
இடம் பொருள் ஏவல்
விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் இந்த படத்தை சீனு ராமசாமி இயக்க, லிங்குசாமி தன்னுடைய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார். அந்நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டதால் பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்த பின்னரும் இந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை.
துருவ நட்சத்திரம்
துருவ நட்சத்திரம் படம் பற்றி அறிமுகமே வேண்டாம். இணையத்தில் ட்ரோல் மெட்டீரியலாகவே மாறிய படம். இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கௌதம் மேனனின் பொருளாதார சிக்கல்களால் இந்த படமும் ரிலீஸாகாமல் உள்ளது. ஆனால் எப்போது ரிலீஸானாலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக கௌதம் பேசி வருகிறார்.
பார்ட்டி
சென்னை 28 படத்தின் 2-ம் பாகத்துக்குப் பின்னர் வெங்கட்பிரபு இயக்கிய படம் பார்ட்டி. இதில் சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஜெய், சிவா, ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. படத்தின் டீசர் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளியானது. ஆனால் அதன் பிறகு படத்தைப் பற்றி எந்தவித அறிவிப்பும் இல்லை. இதற்குக் காரணம் இந்த படம் பிஜி தீவில் படமாக்கப்பட்டு அந்நாட்டு மானியத்துக்காகக் காத்திருப்பதுதான் என சொல்லப்படுகிறது.
சுமோ
இந்த படம் ஏன் ரிலீஸாகவில்லை என்பதுதான் பலருக்கும் ஆச்சர்யம். ஏனென்றால் படத்தைத் தயாரித்திருப்பது மிகப்பெரிய நிறுவனம். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் மிர்ச்சி சிவா நடித்த சுமோ என்ற திரைப்படம், 2019 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரான நிலையில் 6 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. ஆனால் இந்த ஆண்டு இந்த படம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
சர்வர் சுந்தரம்
சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் திரைப்படம் 2017 ஆம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டாலும் இன்னமும் ரிலீஸாகாமல் உள்ளது. இதற்கு தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளே காரணம் என சொல்லப்படுகிறது. இதுவரை பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டது. கடைசியில் இந்த படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்துவிடவேண்டும் என்ற முடிவில் உள்ள தயாரிப்பாளர் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அதுவும் கைகூடவில்லை.
நரகாசூரன்
தமிழில் 'துருவங்கள் 16' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக தடம் பதித்த கார்த்திக் நரேன் தற்போது 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் ஆகியோர் தயாரித்தனர். படப்பிடிப்பு முடிந்தும் கௌதம் மேனனின் பணப் பிரச்சனைகளால் ஏழு ஆண்டுகளாக இந்தப் படம் இன்னும் ரிலிஸாகாமல் உள்ளது.