சமீபத்தில் தெலுங்கில் வெளியான பவன் கல்யாணின் 'ஓஜி' திரைப்படம், இசைக்காகவும் பின்னணி இசைக்காகவும் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், 'ஓஜி' படத்திலிருந்து நடிகர் சிம்பு பாடிய இரண்டு பாடல்கள் திடீரென நீக்கப்பட்ட சம்பவம் கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் தமனும், நடிகர் சிம்புவும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆவர். அந்த நட்பின் அடிப்படையில், தமன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சிம்பு இரண்டு பாடல்களை பாடுவதற்காக சுமார் எட்டு மணி நேரம் செலவு செய்துள்ளார். படத்தின் ரிலீஸுக்கு முன்புவரை, சிம்புவின் பாடல்கள் படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் படம் வெளியானபோது, சிம்பு பாடிய அந்த இரண்டு பாடல்களிலும் அவரது குரல் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக, ட்ராக்கில் பாடிய வேறொருவரின் குரலையே தமன் பயன்படுத்தியதாக தெரிகிறது.
இந்த நீக்கத்திற்கு காரணமாக ஒரு தகவல் பரவி வருகிறது. வெற்றிமாறன் இயக்கும் 'எஸ்டிஆர் 49' படத்துக்கு தன்னை இசையமைப்பாளராக கமிட் செய்யுமாறு தமன், சிம்புவிடம் கேட்டாராம். சிம்பு இதற்கு சரியாக பதிலளிக்கவில்லை அல்லது இயக்குநரின் முடிவுக்கு விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தமன், தனது நண்பர் என்றுகூட பார்க்காமல் சிம்பு பாடிய பாடல்களை நீக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும், 'எஸ்டிஆர் 49' படத்துக்கு ஏற்கெனவே வேறொருவர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் உள்ளது. எது உண்மை என்று தெரியவில்லை என்றாலும், பவன் கல்யாணின் நடிப்புக்கு சிம்புவின் குரல் பொருத்தமாக இருந்திருக்கும் வாய்ப்பை தமன் வீணாக்கிவிட்டார் என்று ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.