இயக்குனர் ஷங்கர் மற்றும் சுபாஷ்கரன் ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்பில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்து சுமூகமாக செல்வதாக முடிவு எட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இதனை எதிர்த்து லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது சம்பந்தமாக மத்தியஸ்தர் ஒருவரை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் நியமனம் செய்தது என்பதும் அவருடைய அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆனால் இந்தியன் 2 திரைப்படம் முடியும் வரை மற்ற படங்களை ஷங்கர் இயக்கத் தடை கேட்டு லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யபபட்டன. இதை எதிர்த்து இப்போது ஷங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் ஐதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலும் வழக்கு தொடர உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஷங்கர் மனதளவில் அழுத்தத்தில் இருந்தார்.
இந்நிலையில் ஷங்கரை, இந்தியா வந்திருந்த லைகா அதிபர் சுபாஷ்கரன் சந்தித்து பேசியதாகவும், அதையடுத்து எல்லா பிரச்சனைகளையும் சுமூகமாக தீர்த்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து முதல் கட்டமாக ஷங்கர் மேல் பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என தெரிகிறது. இந்தியன் 2 படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இன்று இந்தியன் 2 தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அது சம்மந்தமாக நான்கு வாரம் அவகாசம் வேண்டுமெனவும் கோரப்பட்டது. இந்நிலையில் விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது நீதிமன்றம்.