விஜய் நடித்து வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவள்ளி என்பதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பூதாகரமான ஒரு புதிய பிரச்னையை கிளப்பியுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயரும் கோமளவள்ளி தான். எனவே எந்த நோக்கத்தில் வில்லி கதாபாத்திரத்திற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சர்கார் படத்தில் முதல்வர் பழ. கருப்பையாவின் மகளாக கோமளவள்ளி என்ற கொடூர வில்லி நடித்திருந்தார். படத்தில் அவர் அப்பாவுக்கே விஷம் வைத்துக்கொல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வரலக்ஷ்மி ஜெயலலிதா போலவே கழுத்தில் நகை எதுவும் அணியாமல், கழுத்துவரை உடை அணிந்து வடிவமைக்கப்பட்டிருந்தார்.
தற்போது, இந்த பஞ்சாயத்தில் தன்னையும் இணைத்துக்கொண்ட தனியரசு எம்.எல்.ஏ. ‘படத்தின் வில்லி கேரக்டருக்கு சூட்டப்பட்ட கோமளவள்ளி என்கிற பெயரை உடனே மாற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும்’ என்று புதிதாய் ஒரு போராட்ட களத்தில் குதித்துள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளி கதாபாத்திரம்,விஜயை ஹீரோவாக காட்டும் படத்தில் வில்லியாக இருப்பது அரசியல்வாதிகளின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.