பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் சல்மான் கான். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு இருப்பது போன்ற வெறித்தனமான ரசிகர்கள் இந்தி சினிமாவில் சல்மான் கானுக்கு உண்டு. அதனால்தான் அவர் மேல் பல சர்ச்சைகள், வழக்குகள் இருந்தும் இன்றளவும் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
சமீபகாலமாக சல்மான் கானின் படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றனர். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடிப்பில் உருவான சிக்கந்தர் திரைப்படம் படுதோல்வி அடைந்ததோடு மோசமான விமர்சனங்களையும் பெற்றது. அதனால் உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.
இந்நிலையில் சல்மான் கான் சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில் ஐபிஎல் அணியை வாங்குவது சம்மந்தமாக தனக்கு வந்த அழைப்பைப் பற்றி பேசியுள்ளார். அதில் “2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய போது ஒரு அணியை வாங்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அப்போது நான் அதில் விருப்பம் காட்டவில்லை. அதற்காக இப்போது வருத்தப்படவுமில்லை. இப்போது ஒரு ஐபிஎல் அணியை வாங்குவீர்களா எனக் கேட்கிறார்கள். எனக்கு இப்போது வயதாகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.