தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களை வைத்துப் படம் இயக்கி வெற்றியைக் கொடுத்தவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். ஆனால் சமீபகாலமாக அவரது தர்பார் மற்றும் சிக்கந்தர் போன்ற படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. அது மட்டுமில்லாமல் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டும் வருகின்றன.
தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை இயக்கி வரும் அவர் அளித்த ஒரு நேர்காணலில் சிக்கந்தர் படத்தின் தோல்வி குறித்துப் பேசும்போது பிறமொழிகளில் படம் இயக்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்துப் பேசியுள்ளார்.
அதில் “தாய் மொழியில் படம் பண்ணும் போது நம்முடைய முழுத் திறனையையும் பயன்படுத்த முடிகிறது. இப்போது என்ன ட்ரண்ட், ரசிகர்கள் எதை ரசிக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிகிறது. ஆனால் பிற மொழிகளில் படம் பண்ணும்போது கதை மற்றும் திரைக்கதை ஆகியவற்றை மட்டுமே நம்பி இறங்குகிறோம். வசனங்கள் மொழிமாற்றம் செய்யப்படும்போது நடிகர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை யூகிக்கதான் முடிகிறது. உறுதியாக எதுவும் தெரியாது. இதனால் பிற மொழிப் படங்களை இயக்கும்போது ஒரு கை இல்லாத மாற்றுத் திறனாளி போலதான் உணர்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.