புகைப்படக்கலைஞர் எல்.ராமச்சந்திரனின் புகைப்படக்கண்காட்சியை நேற்று நடிகர் விஜய் சேதுபதி துவக்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "25 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அற்புதம்மாளிடம் அந்த குழந்தை சென்று சேர வேண்டும். தயவு செய்து அண்ணன் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும். அந்த அம்மாவினுடைய போராட்டம் என்பது பெரிய தவம். அந்த தவத்துக்காவது அவர் வெளியே வரவேண்டும்.
ஒரு அம்மாவிடம் இருந்து குழந்தையை பிரிக்கிறது மிகப்பெரிய பாவம். இத்தனை வருடம் அது நடந்துவிட்டது. பேரறிவாளன் அண்ணன் வெளியே வரவேண்டும். அவரோட அம்மா கூட சேர்ந்து வாழ வேண்டும். பேரறிவாளன் பரோலில் வந்த போது நான் சென்று பேசியிருக்கிறேன். வெளியே வந்தவுடன் சென்று சந்திக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்கு இருக்கிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அண்ணன் பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.