கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த படைத்தலைவன் திரைப்படம் நாளை வெளியாக இருந்தது. ஆனால் போதுமான தியேட்டர் கிடைக்காததால், இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தியில், படைத்தலைவன் திரைப்படம் மே 23ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் , திரையரங்கு ஒதுக்கீடு சிக்கல்கள் காரணமாக பட வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து அறிவிப்போம் என்றும், இந்த இடையூறுக்கு மன்னிப்பு கோரியும், உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஒரு காலத்தில், விஜயகாந்த் படங்கள் வெளியாகும்போது, ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவுகள் தொடங்கி, ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும். ஆனால் இப்போது, அவருடைய மகன் சண்முக பாண்டியன் நடித்த திரைப்படம் திரையரங்கு ஒதுக்கீடு சிக்கல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பெரிய அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அந்த விழாவில் ஏ.ஆர். முருகதாஸ் கலந்து கொண்டு, “வளர்ந்து வாருங்கள், ரமணா 2 செய்வோம்” என்று கூறியிருந்தார். ஆனால், படைத்தலைவன் படத்திற்கு ஏற்பட்ட இந்த சிக்கல் பரபரப்பையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.