திருநெல்வேலியில் உள்ள ராம் சினிமாஸ் எனும் திரையரங்க நிர்வாகம் ஊரடங்கு விலக்கப்பட்ட பின்னர் திரையரங்கில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது கோடை காலம் நெருங்கியுள்ள நிலையில் இது இந்திய திரையரங்கங்களின் முக்கியமான காலகட்டம் என்பதால் வசூல்மழை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு இன்னும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் ஊரடங்கு விலக்கப்பட்டாலும் திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகளை மட்டும்தான் நிரப்பப் போவதாக திருநெல்வேலியில் ராம் சினிமாஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் ‘எங்கள் திரையரங்கில் 767 இருக்கை உள்ளது. அதில் பாதியை மட்டுமே அனுமதித்து தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க உள்ளோம். இடைவேளையில் ரசிகர்களின் இருக்கைக்கு வந்தே நாங்கள் சாப்பிட ஆர்டர் எடுத்துக் கொள்வோம். உங்கள் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம்’ எனத் தெரிவித்துள்ளது.