கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிராவில் இருந்து ஒடிசாவுக்கு 1700 கிமீ தூரத்தை தனது சைக்கிளிலேயே கடந்துள்ளார் இளைஞர் ஒருவர்.
கொரோனா வைரஸால் உலகெங்கும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊரை விட்டு வெளீயூர்களில் வேலைகளில் இருக்கும் அவர் உரிய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் நடந்தே சொந்த ஊருக்குப் பயணம் மேற்கொண்டு வருவதை நாம் காண்கிறோம்.
அதேபோல மகாராஷ்டிராவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மகேஷ் ஜீனா என்ற இளைஞர், மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மிராஜ் எம்ஐடிசி தொழில்துறை பகுதியில் வேலைப் பார்த்து வந்துள்ளார். அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் கையில் காசு இல்லாத அவர், 1700 கி மீ தொலைவில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு தனது சைக்கிளிலேயே செல்ல முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் ஒரு நாளுக்கு 200 கி மீ என்ற விதத்தில் அவர் தனது கிராமத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளார்.
வரும் வழியில் போலிசாரிடம் தனது பயணத்தைப் பற்றி சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டும், ஆங்காங்கே லாரி டிரைவர்களிடம் உதவிகள் பெற்றும், ஏப்ரல் 7 ஆம் தேதி தனது கிராமத்தை அடைந்துள்ளார். அவர் தற்போது ஆரோக்யமாக இருப்பதாக செய்திகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.