இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' மற்றும் அதன் இரண்டாம் பாகம் என இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றன என்பதும், உலகம் முழுவதும் வசூலில் சாதனை செய்தன என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், சமீபத்தில் ராஜமவுலி இந்த இரண்டு படங்களையும் சேர்த்து ஒரே படமாக எடிட் செய்து வெளியிட போவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், எடிட் செய்யப்பட்ட 'பாகுபலி 1 & 2' திரைப்படம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் ரன்னிங் டைம் கொண்டிருக்கும் என்று கூறப்படுவதுதான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவோ கஷ்டப்பட்டு முக்கிய சில காட்சிகளை குறைத்த போதும், நான்கு மணி நேரத்திற்கு குறைவாக இந்த படத்தை எடிட் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. நான்கு மணி நேரம் என்பதால், இந்த படத்திற்கு இரண்டு இன்டர்வல் விடப்படலாம் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகளை ஆகஸ்ட் முதல் ராஜமவுலி துவக்க இருப்பதாகவும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு படக்குழுவினரை அழைத்து செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.