பிரபல மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
37 வயதான ரஸல் 2019 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். மேற்கிந்திய தீவுகள் அணியில் உள்ள ஒரே மூத்த வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், ரஸலின் இந்த ஓய்வு அறிவிப்பு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஒரு பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 56 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்ட்ரே ரஸல் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி உள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஐ.பி.எல்., பி.பி.எல்., பி.எஸ்.எல். போன்ற லீக் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து நிகோலஸ் பூரன் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது ரஸல் ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.