சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கபாலி திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ராதிகா ஆப்தே, மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகஉள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது, விஜய் சேதுபதி நடிக்க உள்ள பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்துக்காக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இதே படத்தின் ஹீரோயினாக காதல் தேசம் புகழ் தபு நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால், புதிய தகவலின்படி, ராதிகா ஆப்தேவுடன் பூரி ஜெகன்நாத் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும், இவர் படத்தில் இடம்பெறும் விஷயம் உறுதியாகி விட்டதாகவும் அறியப்படுகிறது.
தன்னுடைய படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் ராதிகா ஆப்தே, இந்த படத்திலும் வித்தியாசமான ஒரு ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தோனி படத்தின் மூலம் அறிமுகமான ராதிகா, அதன் பின்னர் ஆல் இன் ஆல் அழகர் ராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும், 2016-ல் வெளியான கபாலியில் குமுதவல்லி என்ற கதாபாத்திரம் மூலம் பெரும் வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.