பண்பலை தொகுப்பாளராக இருந்த ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமாக்களைக் கண்டபடி வறுத்தெடுத்து விமர்சனம் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பிறகு அவருக்கு தீயா வேல செய்யணும் குமாரு படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிறகு அவர் நடித்த நானும் ரௌடிதான் படம் அவரைப் பிரபல நடிகராக்கியது.
அதன் பின்னர் எல் கே ஜி படத்தில் கதாநாயகனாக நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அவர் இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார். இப்போது இயக்குனராக சூர்யா 45 படத்தை இயக்கவுள்ள அவர் சொர்க்கவாசல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தும் உள்ளார். அந்த படம் நவம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகிறது.
இதையடுத்து அவர் அளித்த ஒரு நேர்காணலில் ஏன் இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் அதை மறுத்தார் எனக் கூறியுள்ளார். அதில் “என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் 5 கோடி ரூபாய் வரை முதலீடு செய்கிறார். அதனால் நான் மற்ற படங்களில் ஒரு 5 நிமிடக் காட்சியில் வந்து போகும் வேடத்தில் நடிப்பது சரியில்லை. அதனால்தான் நான் இந்தியன் 2 வாய்ப்பை மறுத்தேன். ஒருமுறை சுந்தர் சி சார் என்னிடம் கூறினார் சிங்கத்துக்கு வாலாக இருப்பதை விட எலிக்கு தலையாக இருக்கலாம் என்று.” எனக் கூறியுள்ளார்.