தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான், மற்றும் என் ஜி கே உள்ளிட்ட படங்களைத் தயாரித்த டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்து சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
மிகக் குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் காஷ்மீரா பரதேசி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதையை சூர்யாவிடம் சொல்லி சம்மதம் வாங்கியது குறித்து ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. அதில் “நான் இந்த கதையை சூர்யா சாரிடம் ஒரு மணிநேரம் சொன்னேன். கேட்டு முடித்ததும் அவர் உடனே நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்றார். அவர் கடந்த 16 ஆண்டுகளாக எந்த கதையையும் இப்படிக் கேட்டதும் ஓகே சொன்னதில்லையாம். இதை அவரே என்னிடம் சொல்லி இந்த கதையை ஓகே செய்தார்” எனக் கூறியுள்ளார்.