தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அந்தகன்- தி பியானிஸ்ட்' திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, லஷ்மி பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். செந்தில் ராகவன் கலை இயக்கத்தை கவனிக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லர் ஜானரிலான இப்படத்தை ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரித்திருக்கிறார், பிரீத்தி தியாகராஜன் வழங்குகிறார்.
ஆகஸ்ட் -9 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் சென்னை தனியார் விடுதியில் வெளியிடப்பட்டது.
இந் நிகழ்வில்
நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில்......
அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள். 'அந்தகன்' படத்தைப் பற்றி நிறைய பேசியிருக்கிறேன். படத்தினை பற்றிய எனது எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறேன். இருந்தாலும் அது போதாது. ஏனெனில் இந்த படத்திலும், படப்பிடிப்பு தளத்திலும் ஏராளமான அன்பினை உணர்ந்தேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரிடத்திலும் தியாகராஜன், பிரசாந்த் இருவரும் மிகுந்த அன்பை காட்டினர்.
அண்மையில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற ஆங்கில தொடரில் இடம் பெறும் வாசகத்தை போல் 'எவ்ரிபடி லவ்ஸ் பிரசாந்த்...' பிரசாந்த் மீது அன்பு செலுத்தாதவர்கள் யாரும் இல்லை.
சிம்ரனை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். இப்போதும் அழகாகவும், இளமையாகவும், துடிப்பாகவும் இருக்கிறார்கள்.
'அந்தகன்' திரைப்படம் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். நானும் இந்த திரைப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்கத்தில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். இத்திரைப்படம் ஆகஸ்டு ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்என்றார்.
நடிகை பிரியா ஆனந்த் பேசுகையில்......
இங்கு வருகை தந்திருக்கும் அனைவரும் இயக்குநர் தியாகராஜனை பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் அவர்களது வீட்டில் இருவர் இருக்கிறார்கள். பிரீத்தி மற்றும் பிரசாந்தின் அம்மா. இவர்கள் இருவரும் இப்படி இருப்பதற்கு அவர்கள் தான் காரணம்.
படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர் என மூன்று நாட்கள் பயணித்தோம். மிகவும் சந்தோஷமாக இருந்தது.
இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும் வெற்றி விழாவில் சந்திப்போம். இப்படம் விஷுவலாக பிரம்மாண்டமாக இருக்கிறது. இதற்காக ஒளிப்பதிவாளர் ரவி மற்றும் இயக்குநர் தியாகராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகை சிம்ரன் பேசுகையில்......
அந்தகன் படத்தின் கதை, திரைக்கதை நன்றாக இருக்கிறது. தியாகராஜனின் இயக்கத்தில் இந்த படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரசாத்துடன் நான் நடிக்கும் ஏழாவது திரைப்படம் இது. மற்றொரு பிளாக்பஸ்டர் வெற்றிக்காக காத்திருக்கிறேன்.
ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்று அனைவரும் 'அந்தகன்' திரைப்படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும் என்றார்.
நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில்......
இறைவனுக்கு நன்றி. உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். மிகவும் சந்தோஷமான நிகழ்வு இது.
நண்பன் சசியை பல இடங்களில் நண்பன் பிரசாந்த் நினைவு படுத்தினார். ஒரு முறை சசிக்குமார் கையில் வாட்ச் ஒன்றை அணிந்திருந்தார். அதனை உற்று நோக்கிக் கொண்டே இருந்தேன். மாலையில் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன், 'வா' என்று அழைத்துக் கொண்டு ஒரு கடிகார கடைக்கு அழைத்துச் சென்றான். அங்கு என்னிடம், 'நீ என் வாட்ச்சை பார்த்தாய் அல்லவா..! அதனால் உனக்கு பிடித்த வாட்சை வாங்கிக்கொள்' என்றார். அவரிடம் உரிமையாக, 'எனக்கு அந்த வாட்ச் தான் பிடித்திருக்கிறது. அதனால் தான் அதனை உற்று நோக்கிக் கொண்டே இருந்தேன்' என்றேன். உடனே அவர், 'சரி அதை நீ கட்டிக் கொள். எனக்கு ஏதாவது ஒன்றை புதிதாக தேர்ந்தெடுத்து கொடு'' என்றார். அதேபோல் நண்பர் பிரசாந்த் ஒரு கண்ணாடியை அணிந்திருந்தார். அந்த கண்ணாடியை எடுத்து நன்றாக இருக்கிறதே..! என சொன்னேன். அன்று மாலையில் என்னை தேடி மூன்று கண்ணாடிகள் வந்தன. உங்களுக்கு எது பிடிக்குமோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அப்போது பிரசாந்திடம் இது போன்ற விசயங்களை நண்பர் சசிதான் எனக்கு செய்திருக்கிறார். அதற்குப் பிறகு இப்படி ஒரு நண்பராக நீ எனக்கு கிடைத்திருக்கிறாய் என்றேன். உன் பேரன்பிற்கு நான் என்ன செய்யப் போகிறேன்?.
எப்போதும் பிரசாந்த்தை நினைத்துக் கொண்டே இருப்பேன். அப்போது திடீரென்று காரணமே இல்லாமல் அவர் எனக்கு போன் செய்து பேசுவார். அப்போது நாங்கள் இருவரும் ஐயா ஐயா என்று தான் பேசிக் கொள்வோம். இதில் ஆழ்ந்த அன்பு உள்ளது. அந்தப் பேச்சில் காரணமே இருக்காது. அன்பு மட்டுமே இருக்கும். இப்போதெல்லாம் யாராவது போன் செய்தால், எதோ ஒரு விஷயத்திற்காகவே போன் செய்து பேசுவது என பழகி விட்டோம்.
ஆனால் காரணமே இல்லாமல் போன் செய்து நல்லா இருக்கீங்களா? சாப்டீங்களா? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று அன்புடன் பேசுவது குறைந்துவிட்டது. ஆனால் இது போன்ற போன் பிரசாந்திடமிருந்து எனக்கு வரும். இதை நான் உணர்ந்திருக்கிறேன்.
நான் எங்கேயோ ஏதோ ஒரு விஷயத்தை செய்திருப்பேன். அதை பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து பாராட்டுவார். அதுதான் எனக்கு அவர் மீது ஒரு பற்றை உருவாக்கியது.
எனக்கு இந்தத் திரைப்படம் மிகவும் சிறப்பானது. இதன் தொடக்கப்புள்ளி எப்படி என்றால்.. இந்தத் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இதே கேரக்டருக்காக என்னிடம் நடிக்க கேட்டனர், மறுத்துவிட்டேன். இதை தமிழில் ரீமேக் செய்யும் போது தம்பி கிஷோர் மூலமாக என்னை தொடர்பு கொண்டனர்.
எனக்கு தியாகராஜனை பார்த்தாலே பயம். எப்படி என்றால் நான் திரையரங்கத்தில் ஆப்பரேட்டராக பணியாற்றிய போது 'மலையூர் மம்பட்டியான்' படத்தை ஓட்டி இருக்கிறேன். 'கொம்பேறி மூக்கன்' படத்தை திரையில் பார்க்கும்போதே எனக்குள் பதட்டம் வந்துவிடும்.
அவர் போனில் வணக்கம் என்று சொன்னவுடன், நான் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறேன் என்று பதில் அளித்து விட்டேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நேரில் அவருடன் பழகும் போது தான் அவரின் பேரன்பினை உணர்ந்தேன்.
அவருடைய தோற்றம், ஆளுமை... அதை பார்த்துவிட்டு நாமும் இந்த வயதில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியது. அவருடைய அன்பிற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.
படப்பிடிப்பு தளத்தில் வனிதா விஜயகுமார் வந்தார். படப்பிடிப்பின் போது இதுவரை யாரும் என்னை திட்டிராத வகையில் கெட்ட வார்த்தையால் திட்டினார். அந்தக் காட்சியில் அவர் என்னை திட்டிக் கொண்டே இருந்தார். நான் இயக்குநரை பார்க்கிறேன். அவர் என்னிடம் வந்து நான் சொல்லியதை கடந்தும் அவர் திட்டிக் கொண்டிருக்கிறார் என விளக்கம் அளித்தார்.
அதன் பிறகு வனிதா விஜயகுமாரை பார்த்தபோது... இயக்குநர் தான் உங்களை இப்படி எல்லாம் திட்ட சொன்னார் என தியாகராஜனை கை காட்டினார்.
உதவி இயக்குநராக பணியாற்றிய போது சிம்ரனை பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்த போது உண்மையில் மறக்க இயலாது அனுபவமாக இருந்தது.
இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரசாந்த் இந்த படத்திற்குப் பிறகு இன்னும் மும்மடங்கு வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்,'' என்றார்.
இயக்குநர் தியாகராஜன் பேசுகையில்......
இன்றைய தினம் அனைவரையும் சந்திப்பதற்கு முக்கியமான காரணம் இன்று நண்பர்கள் தினம். உலகம் முழுவதும் இருக்கும் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நண்பர்களாகத்தான் பழகினார்கள். படப்பிடிப்பு ஒன்பது மணி என்றால் அனைவரும் ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள். படப்பிடிப்பு அனுபவம் மகிழ்ச்சியாக இருக்கும். திட்டமிட்டதை விட படப்பிடிப்பை சீக்கிரமாக நிறைவு செய்து விடுவோம்.
சமுத்திரக்கனி... அந்த காலகட்டத்திய என்னை நினைவுபடுத்துபவர். தோற்றம் ஆகட்டும், உடல் மொழியாகட்டும், உடற்கட்டு ஆகட்டும், ஸ்டைல் ஆகட்டும், நடை ஆகட்டும்... ஆக்ஷன் என்று சொல்லிவிட்டால், நடிப்பில் சிங்கம் தான். இந்த படத்தில் அவர் மிரட்டி இருக்கிறார் அதிலும் சிம்ரனை மிரட்டி இருக்கிறார். வனிதா விஜயகுமாரை மிரட்டி இருக்கிறார்.
அந்த குறிப்பிட்ட காட்சியில் எமோஷன் வேண்டும் என்பதற்காகத்தான் வனிதாவை அழைத்து, 'உனக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளால் திட்டு' என சொன்னேன். அந்தத் தருணத்தில் சொல்லத் தகாத வார்த்தைகளை எல்லாம் பேசினார். இந்தப் படத்தில் வனிதா விஜயகுமாருக்கு குறிப்பிடத்தக்க அளவிலான அங்கீகாரம் கிடைக்கும். மேலும் அற்புதமான நடிகை என்ற அங்கீகாரமும் கிடைக்கும்.
பிரியா ஆனந்த் - அழகான தமிழ் பெண். தமிழ்த் திரையுலகில் பயன்படுத்தவில்லை என்று என்னிடம் சொன்னார். ஆனால் அவர் இங்கு பேசியதெல்லாம் ஆங்கிலத்தில் தான். அதனால் தான் சொல்கிறேன். இனி எந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும் ஆங்கிலத்தில் பேசு. அப்போதுதான் தமிழ் பெண் என தெரியும்.
இந்தப் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்வது என்பது குழப்பமாக இருந்தது. அப்போது என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த பிரியா ஆனந்த் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்தேன்.
முன்னோட்டத்திலும் அவர் அழகாக இருக்கிறார். நடனமாடி இருக்கிறார். தேர்ந்த நடிப்பையும் வழங்கி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் அவருக்கும் பெரிய அங்கீகாரம் கிடைக்கும். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.
சிம்ரன்,vபிரசாந்துடன் இதற்கு முன் ஆறு படங்கள் நடித்திருக்கிறார். இந்த படத்தின் உரிமையை வாங்கிய பிறகு ஏன் இந்த படத்தில் சிம்ரனை நடிக்க வைக்க கூடாது என யோசித்தேன். இது தொடர்பாக நான் அவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, நான் இந்தி படத்தை பார்த்து விட்டேன். அதனால் நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். இந்தப் படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அனுபவமிக்க நடிப்பை வழங்கி இருக்கிறார்.
இந்தப் படத்தில் அவர் சற்று உணர்ச்சி மிகுந்த தொனியில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஏன் இப்படி நடிக்க வேண்டும் என கேட்டார். அப்போது இந்த கதாபாத்திரம் எப்படி நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று நான் சொன்னேன். அதை ஏற்றுக் கொண்டு அவர் ஆக்ரோஷமாக நடித்தார். அவருடைய பேச்சு, வன்முறை எல்லாம் ஒரு ஆணை போல் இருக்கும். படம் வெளியான பிறகு சிம்ரனுக்கு விருது கிடைக்கும். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் விட சிம்ரனுக்கு சிறப்பான பெயரும், புகழும் கிடைக்கும்.
பிரசாந்த் - பியானோ வாசிக்கும் கலைஞர். இந்தத் திரைப்படத்தை வாங்குவதற்கு முக்கிய காரணமே கதையின் நாயகன் பியானோ இசைக்கலைஞர் என்பதால் தான். நான் இந்த திரைப்படத்தின் உரிமையை வாங்கி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நடிகர்கள் யார் என்பதனை நிதானமாக யோசித்து தேர்வு செய்ய தொடங்கினேன். அதன் பிறகு படத்தின் பணிகளை தொடங்கினோம். இடையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் இரண்டு ஆண்டுகள் சென்றன. அதன் பிறகு எதிர்பாராத சில சிக்கல்கள் ஏற்பட்டது. அதன் பிறகு படத்தை நிறைவு செய்தோம். அதனைத் தொடர்ந்து பிரபுதேவாவை வைத்து ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்டோம். பிரபுதேவா அதற்கான காட்சிகளை உருவாக்க சாண்டி மாஸ்டர் நடனத்தை அமைத்தார். அந்தப் பாடலை அனிருத்-விஜய் சேதுபதி பாடினர், விஜய் வெளியிட்டார். இப்பாடல் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்தப் பாடலில் பிரசாந்தின் நடனத்தை பலரும் நடனமாடி இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள்.
இந்தப் படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக பயணித்த போது பிரசாந்தின் ரசிகர் ஒருவர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். இதனால் பிரசாந்த் மனவருத்தம் அடைந்தார். உடனே இது தொடர்பாக தமிழகம் முழுவதும் வாகனத்தில் பயணிக்கும் போது தலைகவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏன் ஏற்படுத்தக் கூடாது என சிந்தித்தார். அத்துடன் நில்லாமல் பிரசாந்தின் பிறந்த நாளின் போது தமிழகம் முழுவதும் 5000 தலை கவசத்தினை அவரது ரசிகர்களுக்கு வழங்கினார்.
கே. எஸ். ரவிக்குமார் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் சட்டிலான வில்லனிக் கேரக்டரில் நடித்திருப்பார்.
இந்தப் படத்தில் ஒவ்வொரு போர்ஷனுக்கும் ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். பிறகு மற்றொரு சஸ்பென்ஸ் வரும். இதையெல்லாம் கடந்து என்ன நடக்கிறது? என்ன ஆச்சு? இது உண்மையா? பொய்யா? என பல கேள்விகள் ரசிகர்களிடத்தில் எழும்.
நானே அந்த இந்தி படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். அதே போன்றதொரு உணர்வு தமிழ் திரைப்படத்தை பார்க்கும் போதும் ரசிகர்களுக்கு வரும். அதனால் இந்த திரைப்படத்திற்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவார்கள்.
பெசன்ட் ரவி- பிரசாந்த் நடிக்கும் படத்தில் அவர் இருக்க வேண்டும் என விரும்புவேன். இந்த திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஊர்வசி- என்னுடன் 'கொம்பேறி மூக்கன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். நான் தயாரித்து பிரசாந்த் நடித்த 'மன்னவா' படத்திலும் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று சொன்னேன். சொன்னவுடன் வந்து நடித்துக் கொடுத்தார். அவரும், யோகி பாபுவும், கே.எஸ். ரவிகுமாரும், பிரசாந்த்தும் இணைந்து தோன்றும் காட்சிகள் அனைத்தும் சிறப்பானதாக இருக்கும். சுவாரசியமானதாகவும் இருக்கும்.
மறைந்த நடிகர் மனோபாலா, ஜெயம் கோபி, விஜேந்தர், பூவையார், லீலா சாம்சன் என பலரும் நடித்திருக்கிறார்கள்.
'அந்தகன்' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவே எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்களிடையே ஆரோக்கியமான பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை நானூறு திரையரங்குகளில் 'அந்தகன்' திரைப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளோம். இதற்கும் கூடுதலாக வெளியிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் விருப்பமுடன் இருக்கிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை என கருதுகிறேன்.
இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நடிகர் பிரசாந்த் பேசுகையில்......
அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
'அந்தகன்' அருமையான படைப்பு. இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அனைவருடனும் மறக்க இயலாத அனுபவம் இருக்கிறது.
இதில் ஐயா கனி சாரை மறக்க முடியாது. அவரை நான் ஐயா என்று தான் அழைப்பேன். அவரையும் சசிகுமாரையும் அலுவலகத்தில் இருக்கும் போது நான் நேரில் சென்று சந்தித்து இருக்கிறேன். அந்தத் தருணத்திலிருந்து இருவரையும் பின் தொடர்கிறேன்.
இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தேர்வு நடைபெறும் போது இயக்குநரின் பட்டியலில் கனி ஐயாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு இயக்குநர் கனி சாருடன் பேசினார். அவரும் ஒப்புக்கொண்டு படப்பிடிப்புக்கு வருகை தந்தார். அவர் ஒரு நேர்த்தியான தொழில்முறை நடிகர்.
இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டவுடன், 'எனக்கு மூன்று வார கால அவகாசம் கொடுங்கள். நான் தற்போது ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் அதனை நிறைவு செய்துவிட்டு, உங்கள் படத்தில் நடிக்கிறேன்' என்றார். அதன் பிறகு அவர் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். இப்படி ஒரு தீவிர பற்றுள்ள நடிகரா என நான் அவரை வியந்து பார்த்தேன்.
நான் ஒவ்வொரு நேர்காணலிலும் தவறாது குறிப்பிடும் விஷயம் ஒவ்வொரு படப்பிடிப்பின் போதும் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வேன், கற்றுக் கொண்டே இருக்கிறேன் எனக் குறிப்பிடுவேன். அந்த வகையில் சமுத்திரக்கனி ஐயாவிடமிருந்து நடிப்பின் மீதான தொழில்முறையிலான பெரு விருப்பத்தை கற்றுக் கொண்டேன்.
இந்தப் படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக நான், சிம்ரன், பிரியா, பெசன்ட் ரவி ஆகியோர் இணைந்து பயணித்தோம். அப்போது என் போனில் ஒரு குரல் ஒலித்தது. எங்கே இருக்கிறீர்கள் எனக் கேட்டார். நாங்கள் இந்த ஊரில் இருக்கிறோம் என சொன்னேன் நீங்கள் மட்டும் ஏன் தனியாக பயணிக்கிறீர்கள் நானும் உங்களுடன் இணைகிறேன் என சொன்னார் அந்த குரலுக்கு சொந்தக்காரர் சமுத்திரக்கனி. அவருக்கு இந்த தருணத்தில் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இந்த ஆதரவிற்காகவும்,, எங்கள் மீது அன்பு செலுத்துவதற்காகவும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நானும் சிம்ரனும் இதுவரை ஆறு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். திரையுலகில் எனக்கு கிடைத்த அற்புதமான சக நடிகை. எனக்கு உற்ற நண்பி. அற்புதமான நடனக் கலைஞர். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரத்திற்கும் அவருடைய கதாபாத்திரத்திற்கும் நிறைய முரண்கள் இருக்கும். அதை நீங்கள் திரையில் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள்.
இந்தப் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும். இதுதான் இந்த படத்தில் சிறப்பம்சம் எனக் குறிப்பிடலாம். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் நடிகர்கள் திறமையாக நடித்திருப்பார்கள். இதை ரசிகர்கள் திரையரங்கில் பார்க்கும் போது நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.
பிரியா ஆனந்த்- திறமையான சக நடிகை படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் உற்சாகமாக வைத்திருப்பார். படப்பிடிப்பு தளம் முழுவதும் மகிழ்ச்சியை பரவச் செய்வார்.
வனிதா விஜயகுமார்- என் உடன் பிறந்த சகோதரி போன்றவர். எப்போதுமே உற்சாகமாக இருப்பார். இந்த படத்தை எப்படி எல்லாம் விளம்பரப் படுத்த வேண்டும் என்பதில் நிறைய ஆலோசனைகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அவர் இந்த படத்தில் நடித்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.
நடிகர்களை கடந்து ஒளிப்பதிவாளர் ரவி யாதவ், கலை இயக்குநர் செந்தில் ராகவன்... இருவரும் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் அமைதியாகவே இருப்பார்கள் ஆனால் அவர்களது செயல் பேசும்.
யோகி பாபு, மோகன் வைத்யா, ஊர்வசி என பலருடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது.
அருமையான மனிதரை இந்த படத்தில் சந்தித்தேன். அவர் என்னுடைய இன்ஸ்பிரேஷன். முழு படத்தையும் அவர்தான் உயர்த்தி பிடித்திருக்கிறார். அவர்தான் கார்த்திக். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்கிறேன். அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதற்கும், படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பழகியதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அவர் வருகை தந்தாலே உற்சாகம் பீறிடும். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
நான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. இந்த நண்பர்கள் தினத்தின் எனக்கு கிடைத்த மிகச்சிறந்த நண்பர் என்னுடைய தந்தையார் தியாகராஜன். மிகச் சிறந்த மனிதர். தயாரிப்பாளர் சாந்தி தியாகராஜனுக்கும், எனது தங்கை பிரீத்தி தியாகராஜனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகஸ்ட்9 -தேதி அன்று 'அந்தகன்' படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் புதிய அனுபவத்தை வழங்கும், அனைவரும் வருகை தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.