பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 5 மணி நேரத்தில் ஜாமீன் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியான நிலையில், முதல் நாள் முதல் காட்சியை ரேவதி என்ற பெண் பார்ப்பதற்காக தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வந்திருந்தார். அப்போது அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்திருந்ததால், ரசிகர்கள் முண்டியடித்து அவரை பார்க்க சென்றனர். அந்த நெரிசலில் ரேவதி சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து, போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தியேட்டர் மேனேஜர், உரிமையாளர் உள்பட மூன்று பேரை கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று அல்லு அர்ஜுனையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதனை அடுத்து, அவருக்கு 14 நாட்கள் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நடந்த அசம்பாவிதத்திற்கு ஒரு நடிகர் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, ஐந்தே மணி நேரத்தில் அல்லு அர்ஜூன் ஜாமீன் பெற்றார் என்பதும், இன்று அதிகாலை அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.