கொரோனா பாதிப்பு, புயல், வெள்ளம் என மோசமான ஆண்டாக பலரால் கருதப்படும் இந்த 2020ம் ஆண்டு பல பிரபலங்களையும் பலி கொண்டுள்ளது.
2020ம் ஆண்டு முடிய உள்ள நிலையில் இந்த ஆண்டில் நடந்த பல்வேறு விஷயங்களையும் மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். கொரொனா பாதிப்புகள் போன்றவற்றால் சிறந்த எதையும் நினைவு கூறுவதை காட்டிலும் மோசமான விஷயங்களே அதிகம் உள்ளதாக மக்கள் கருதுகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டில் எதிர்பாராத விதமாக உயிர் இழந்த பிரபலங்கள் குறித்த ஒரு நினைவு கூறல்,,,
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். மகேந்திர சிங் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற இவர் தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இறந்த பிறகு அவர் நடித்து கடைசியாக வெளியான தில் பேச்சாரா படம் அதிகமானோரால் பார்க்கப்பட்டது.
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் ரிஷி கபூர். ராஜ் கபூர் குடும்பத்தை சேர்ந்த இவர் பிரபல நடிகர் ரன்பீர் கபூரின் தந்தையும் கூட.. சமீப காலங்களில் திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர் உடல்நல குறைவால் காலமானார்.
பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபலமாக இருந்த இந்திய நடிகர் இர்பான் கான். ஆங்கிலத்தில் ஜுராசிக் பார்க், ஸ்பைடர்மேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள இவர் சிறந்த நடிப்புக்காக தேசிய விருதையும் பெற்றவர். புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இர்பான் கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. கடந்த 10 வருடத்தில் 20க்கும் அதிகமான படங்களில் நடித்த இவர் நடிகை மேக்னா ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சர்ஜா உயிரிழந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர பாத்திரங்களில் பிரபலமாக நடித்து வந்தவர் தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் இவரது காமெடி வெகுவாக பேசப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வடிவேல் பாலாஜி
திரைப்படங்கள் மூலமாக அறிமுகம் இல்லாவிட்டாலும் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளால் தமிழகத்தில் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. வடிவேல் போல வேடமிட்டு இவர் செய்யும் காமெடிகளை கண்டு சிரிக்காதோர் இல்லை என சொல்லலாம். தமிழகத்தில் பலரை சிரிக்க வைத்த இவர் மாரடைப்பால் தனது 45 வயதில் உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே பெரும் அடையாளமாக திகழ்ந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்துவம் கொண்ட இவர் இந்திய மொழிகளில் மொத்தமாக பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
தமிழ் சின்னத்திரை நடிகை சித்ரா. இவரது திறமையான நடிப்புக்கும், குறும்பான டிக்டாக் வீடியோக்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.