பா ரஞ்சித்தின் இயக்கத்தில் கடந்த ஆண்டு தங்கலான் திரைப்படம் ரிலீஸானது. அதையடுத்து அவர் தற்போது தினேஷ் மற்றும் ஆர்யா ஆகியோர் நடிப்பில் வேட்டுவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அவரே முதல் பிரதி அடிப்படையில் தயாரித்தும் வருகிறார்.
அந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் இறந்தது சர்ச்சைகளைக் கிளப்பியது. தற்போது தன்னுடைய தயாரிப்பில் ரிலீஸாகியுள்ள தண்டகாரண்யம் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் ரஞ்சித் முதல் முறையாக வேட்டுவம் படம் பற்றி பேசியுள்ளார்.
அதில் “நான் முதலில் வேட்டுவம் படத்தை ஒரு கேங்ஸ்டர் கதையாகதான் எழுதினேன். ஆனால் இந்த படத்தை ஏன் உருவாக்க வேண்டும் என கேள்வி எழுந்தது. அந்த படம் சொல்லவருவது அதிகாரப் பகிர்வு பற்றிதான். அதனால் அதன் கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு வேறு ஒரு உலகத்துக்குக் கதையை மாற்றினேன். வேட்டுவம் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு அறிவியல் புனைகதையாக உருவாகி வருகிறது. பார்வையாளர்கள் கொண்டாடக் கூடிய ஒரு படமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் வேட்டுவம் படத்தின் இறுதிகட்ட காட்சிகளை சென்னையை அடுத்த குத்தம்பாக்கத்தில் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கி படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது படத்தில் நடிக்கும் அட்டகத்தி தினேஷ் மற்றும் ஆர்யா ஆகியோரின் மார்க்கெட்டைத் தாண்டிய பணம் என சொல்லப்படுகிறது.