தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த 94 ஜோடிகளின் திருமணத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வைத்தார்.
பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் வி.எல்.கே மண்டபத்தில் இந்த விழா நேற்று நடந்தது.
விழாவில் அமைச்சர் உதயக்குமார் பேசுகையில், "ஓ.பன்னீர்செல்வம் மகன் ஒ.ப.ரவீந்திரநாத்குமார் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகத்தில் அவர் 39 தொகுதியில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவர் வெற்றி பெறுவது உறுதி.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். விருதுநகர் தொகுதியில் ரவீந்திரநாத்குமார் போட்டியிட வேண்டும். அவரை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம். விருதுநகரில் போட்டியிட்டால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைப்பார். இன்றைக்கு அதிமுகவை அடிமை கட்சி என்று பலர் கூறுகிறார்கள். நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகாரத்தை இழந்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. ஆனால் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும். பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் 5இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளோம்.
5 இடம் ஒதுக்கியவர்கள் அடிமையா? 10 இடங்களை ஒதுக்கியவர்கள் அடிமையா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பாக விஜயகாந்துடன் ஒ.பன்னீர்செல்வம் 5 முறை பேசியுள்ளார். விரைவில் தேமுதிக எங்கள் கூட்டணியில் இணையும்" என்றார்.