தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே டிரைவர் ஜமுனா உள்பட ஒருசில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம் ஃபர்ஹானா படம் மே 12 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
இந்த படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக கண்டனங்கள் எழுந்தன. ஆனால் அதை மறுத்துள்ள தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல. நல்ல திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமே தவிர, ஒருநாளும் எந்த மத உணர்வுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிராகவே, புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல.” எனக் கூறியிருந்தார்.
ஆனாலும் சர்ச்சைகள் ஓயாத நிலையில் இஸ்லாமிய தலைவர்களுக்காக படத்தை சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்தனர். அதில் படம் பார்த்த எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அச.உமர் பாரூக் படம் பார்த்த பின்னர் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்தவிதமான காட்சிகளும் இல்லை என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் ” ஃபர்ஹானா' திரைப்பட குழுவினரின் அழைப்பின் பேரில் முஸ்லிம் சமுதாய தலைவர்களுக்காக பிரத்தியேகமாக சிறப்பு ஏற்பாடு செய்யபட்ட நிலையில், பல சமூக தலைவர்களும் பங்கேற்ற போது எஸ்டிபிஐ கட்சி சார்பாக நானும் மற்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டு அப்படத்தை பார்த்தோம். படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகளோ அல்லது சமூகத்தின் மனது புண்படும்படியான வசனங்களோ இடம் பெறவில்லை. எனவே யூகத்தின் அடிப்படையில் இதுவரை பேசப்பட்டவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கருதுகிறேன். ஒரு ஏழை முஸ்லிம் குடும்பத்தின் கதைக்களத்தை மையமாக கொண்டு, இயக்குநர் கதையை நகர்த்தி உள்ளார். அதில் சில படிப்பினைகளும் உள்ளன. மற்றபடி தவறான சித்தரிப்புகள் இப்படத்தில் இல்லை என்பதால் ஃபர்ஹானா' பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.” என கூறியுள்ளார்.