இந்த ஆண்டு இதுவரை தமிழ் சினிமாவில் சில படங்கள் நல்ல வசூலை பெற்றுள்ளன. குறிப்பாக கடைக்குட்டி சிங்கம், தமிழ் படம் 2, டிக் டிக் டிக், பியார் பிரேம காதல், இரும்புத்திரை, தானா சேர்ந்த கூட்டம், கலகலப்பு 2 உள்ளிட்ட படங்கள் நல்ல கலெக்ஷனை பெற்றன.
இனி அடுத்து வரப்போகும் நான்கு மாதங்களில் மிக முக்கிய நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. ஆகஸ்ட் 31ஆம் தேதி நயன்தாராவின் இமைக்கா நொடிகள் ரிலீசாகவுள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் சீமா ராஜா ரிலீசாகப் போகிறது.
இதேபோல் சமந்தாவின் யுடர்ன், விஜய் சேதுபதி திரிஷா நடித்துள்ள 96 படமும் அதே நாளில் வெளியாக உள்ளது. விக்ரம் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாமி ஸ்கொயர் படம் செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியாகலாம் என தெரிகிறது.
இதற்கு அடுத்த வாரம் செப்டம்பர் 28 ஆம் தேதி மணிரத்தினம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள செக்க சிவந்த வானம் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது.
ஆயுதபூஜை விடுமுறையையொட்டி அக்டோபர் 17 ஆம் தனுஷ் நடித்துள்ள வட சென்னை, விஷாலின் சண்டக்கோழி 2, ஜோதிகாவின் காற்றின் மொழி ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.
அடுத்ததாக நவம்பர் மாதத்தில் மூன்று பிரம்மாண்ட நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளது. தளபதி விஜய் நடித்துள்ள சர்க்கார் படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளது.
அதே சமயத்தில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே படமும் வெளியாகவுள்ளது. நவம்பர் இறுதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் 2 படம் ரிலீசாகும் என இயக்குனர் ஷங்கர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
டிசம்பர் மாத வார இறுதிகளில் ஜீவாவின் கீ, ஜெயம்ரவியின் அடங்க மறு, ஜிவி பிரகாஷின் சர்வம் தலமயம், விஜய் சேதுபதியின் சீதக்காதி, தனுஷின் மாரி 2 ஆகிய படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.
எனவே இனி அடுத்த நான்கு மாதங்கள் முழுமையாக ஒவ்வொரு வார இறுதியிலும் பெரும் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும். தியேட்டர்களை பிடிப்பதில் போட்டி நிலவும், அதேபோல் வசூலை கைப்பற்றுவதிலும் கடும் போட்டி இருக்கும்.