தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவின் 75 ஆவது படமான அன்னபூரணி திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நயன்தாராவோடு ஜெய், சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கி இருந்தார். திரையரங்கில் இந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது.
இதையடுத்து படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆனதை அடுத்து வட இந்தியாவில் சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் ஜெய் நயன்தாராவிடம் “ராமர் கூட அசைவ உணவு சாப்பிட்டுள்ளார்” என்று பேசுவது போல இருக்கும். மேலும் ஒரு அர்ச்சகரின் மகளான நயன்தாரா நமாஸ் செய்வது போலவும் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த காட்சிகளைக் குறிப்பிட்டு இந்த மதத்தில் இந்து மதத்தின் புனிதங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சிவசேனா பிரமுகர் ரமேஷ் சோலான்கி என்பவர் மும்பையில் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்டுடியோஸ் வருத்தம் தெரிவித்து சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்கவுள்ளதாகவும் அதுவரை படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்படும் எனவும் அறிவித்தது. ஆனால் அதன் பின்னர் படம் மீண்டும் நெட்பிளிக்ஸில் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது அன்னபூரணி திரைப்படம் மீண்டும் நெட்பிளிக்ஸில் ரிலீஸாகவுள்ளது. ஆனால் இந்தியா தவிர்த்த பிறநாடுகளில் உள்ள பார்வையாளர்களுக்குதான் இந்த படம் காணக்கிடைக்கும்.