மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிசாசு 2. 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்துக்கும் இந்த படத்துக்கும் திரில்லர் என்பதைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்று மிஷ்கின் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டே முடிவடைந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் படம் ரிலீஸாகவில்லை.
இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ரிலீஸாகாமல் முடங்கிக் கிடக்கும் பிசாசு 2 படத்தை தற்போது ரிலீஸ் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மார்ச் மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மிஷ்கின் “பிசாசு 2 படத்தில் ஒரு தாய்க்குள் பேய் இருக்கிறது. அதனால் அவளுக்குள் சில விரசங்கள் உள்ளன. அதற்காக சில நிர்வாணக் காட்சிகள் தேவைப்பட்டன. அதற்கு என் குழந்தை ஆண்ட்ரியாவும் சம்மதம் தெரிவித்தாள். அதற்காக ஒரு போட்டோஷூட் நடத்தினோம். அதில் என் பெண் உதவி இயக்குனர் மட்டுமே இருந்தாள். அந்த போட்டோக்களைப் பார்த்ததும் இதை எல்லோருமே கலைப் பார்வையோடு பார்க்க மாட்டார்கள். இளைஞர்கள் இதைத் தவறாக நினைக்க வாய்ப்புள்ளது என்பதால் நிர்வாணக் காட்சிகள் அனைத்தையும் நீக்கிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.