பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமானது தமிழ் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதிராஜா, தற்போது வயது மூப்பு காரணமாக படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு, சில படங்களில் நடித்து வருகிறார். அவருடைய மகன் மனோஜ் பாரதிராஜா, தாஜ்மஹால் திரைப்படத்தில் அறிமுகமானவர். அதன்பின் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று திடீரென மனோஜ் பாரதிராஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இது பாரதிராஜா குடும்பத்திற்கும், ஒட்டுமொத்த திரையுலகத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் மனோஜ் பாரதிராஜாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்ததாகவும், அதன் பிறகு அவர் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு உடல்நிலை தேறி வந்த நிலையில், திடீரென இந்த சோக சம்பவம் நிகழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெறும் 48 வயதில் மனோஜ் பாரதிராஜா உயிரிழந்தது, அவரது குடும்பத்தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.