தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்புக் காரணமாக காலமானார். அவரின் திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் பெசண்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தந்தை பாரதிராஜாவை போலவே மனோஜும் இயக்குனர் ஆகவேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் தான் நடிகர் ஆகவேண்டும் என்ற ஆசையில் சினிமாவுக்கு வந்ததால் தன் மகனை தாஜ்மகால் படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். ஆனால் அவரால் நடிகராக பெரியளவில் ஜொலிக்க முடியவில்லை. கடைசியில் தந்தையை வைத்தே மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் பெரியளவில் கவனம் பெறவில்லை. இந்நிலையில் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு திரையுலகில் அவரால் வெற்றிகரமாக வரமுடியவில்லை என்ற மன உளைச்சல்தான் காரணம் என்று ஒருசில கருத்துகள் எழுந்தன.
ஆனால் அதை இயக்குனர் பேரரசு மறுத்துள்ளார். இது சம்மந்தமாக அவர், “மனோஜ், மன உளைச்சலாள தவறிட்டதாக ரொம்ப பேர் சொல்றாங்க. அவர் வந்து உங்ககிட்ட அப்படி சொன்னாரா? நான் அவரை நிறைய முறை அவரோட அலுவலகத்துல சந்திச்சுருக்கேன், அவரோட மறைவுக்குக் காரணம் உடல்நிலைதானே தவிர, மனநிலை இல்லை” எனக் கூறியுள்ளார்.