பிரபல தொழிலதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன் காக்கா – கழுகு உவமையை சுட்டிக்காட்டி பேசியுள்ளது வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் அடைமொழி யாருக்கு என ரஜினி, விஜய் இடையே போட்டி நிலவுவதாக அரசல்புரசலாக பேசிக்கொள்ளப்பட்ட நிலையில், ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன காக்கா – கழுகு உவமை கதை பேசுபொருளானது.
அடுத்து லியோ படத்தின் வெற்றிவிழாவின்போது பேசிய நடிகர் விஜய் அதே காக்கா – கழுகை கொண்டு வந்து காட்டில் வைத்து வேறு ஒரு கதை சொல்ல போக அது இன்னும் ட்ரெண்டானது. இப்படியாக காக்கா – கழுகு ட்ரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில் லெஜெண்ட் சரவணா இந்த போட்டி மனநிலையை விமர்சித்து பேசியுள்ளார்.
சமீபத்தில் சென்னை கேகே நகரில் தமிழ்நாடு வணிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய லெஜெண்ட் சரவணன் “இன்று மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமான இடத்தில் சினிமா உள்ளது. ஆனால் அதில் காக்கா – கழுகு சண்டை, இவருக்கு இந்த பட்டம், அவருக்கு அந்த பட்டம் என்ற போட்டிகளால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. நாம் உழைத்தால் மட்டுமே நாம் உயர முடியும். அதுவே நிதர்சனம்” என தெரிவித்துள்ளார்.