ப்ரதீப் மற்றும் மமிதா பைஜு உள்ளிட்டோ நடிப்பில் டியூட் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸானது. இந்த படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கீர்த்தீஸ்வரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.
ரிலீஸுக்கு முன்பே இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததால் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது. ஆறு நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படம் மிகவும் கலகலப்பான ஜாலியான படமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரானக் கருத்தை நக்கலாக பதிவு செய்துள்ளது. அதனால் இந்த படத்துக்கு விமர்சன ரீதியாகவும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் கீர்த்தீஸ்வரன் ஒரு நேர்காணலில் பேசும்போது “இந்த படத்தின் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டிருக்கும்போதுதான் நெல்லையில் கவின் ஆணவப் படுகொலை நடந்தது. அது எங்களை மிகவும் பாதித்தது. அதை படத்தில் பதிவு செய்யவேண்டும் என நினைத்து கிளைமேக்ஸில் சில வசனங்களை சேர்த்தோம்” எனக் கூறியுள்ளார்.