தற்போது உருவாகி வரும் 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.125 கோடி என்ற நிலையில், படத்தின் டிஜிட்டல் உரிமம் மட்டுமே ரூ.125 கோடிக்கு விற்பனையாகி உள்ளது என்ற தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய 'காந்தாரா' திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது. வெறும் ரூ.14 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், ரூ.450 கோடி வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 'காந்தாரா' படத்தின் முந்தைய பாகமான 'காந்தாரா சாப்டர் 1' தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.125 கோடி என்று கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ஜெயராம் நடித்து வரும் நிலையில், படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிம வியாபாரம் தற்போது முடிவடைந்துவிட்டதாகவும், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்தப் படத்திற்கு ரூ.125 கோடி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றியை கணக்கில் கொண்டே இவ்வளவு பெரிய தொகையை நெட்ஃபிக்ஸ் கொடுத்துள்ளது. ஒரு படத்தின் பட்ஜெட்டையே டிஜிட்டல் உரிமம் மூலம் மட்டும் விற்பனை செய்துள்ள நிலையில், இந்தப் படம் முதல் பாகத்தை விட மிகப்பெரிய லாபத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.