சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத் தற்போது மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்ப்ட்டுள்ளார். இதனால் அவர் சினிமாவில் இருந்து சற்று விலகியுள்ளார். கடைசியாக அவர் இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் சீக்கியர்களைப் பற்றி தவறாக சித்தரித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் படம் ரிலீஸ் தேதி சில முறை அறிவித்தும் இன்னும் ரிலீஸாகவில்லை. இது சம்மந்தமாக வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தயாரிப்பு நிறுவனம் பாஜக அரசின் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை வைத்தது. தற்போது ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிந்துள்ள நிலையில் சென்சார் பிரச்சனை முடிந்து படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் நடந்த ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சி ஒன்றில் கங்கனா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “எனக்கு தென்னிந்தியாவில் மல்லிகைப் பூ, காஞ்சிபுரம் புடவை, மெட்ராஸ் காஃபி என எல்லாமே பிடிக்கும். ஒருமுறை தென்னிந்திய இயக்குனர் ஒருவர் “இன்று என் வீட்டில் இருந்து உங்களுக்கு மதிய உணவு வருமென்றார். நான் ஒரு டிஃபன் பாக்ஸில் வரும் என்று நினைத்தேன். ஆனால் அவர் அடுக்கடுக்காக கேரியரில் உணவை எடுத்துவந்தார். பல விதமான உணவுகள் வந்து கொண்டே இருந்தனர். அதற்கு முன்பு நான் அப்படிப்பட்ட உணவுகளை எல்லாம் பார்த்ததே இல்லை.” எனக் கூறியுள்ளார்.