நடிகையும் மக்களவை எம்பியுமான கங்கனா ரனாவத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடும் நிலையில், பாஜகவின் செய்தி தொடர்பாளர் கங்கனா ரனாவத் கூறிய கருத்துக்கள் கட்சியின் கருத்துக்கள் அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் பாஜகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும், தற்போது அவர் மக்களவை எம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விவசாய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து, மத்திய அரசு அந்த சட்டங்களை ரத்து செய்தது. ஆனால், விவசாய சட்டங்கள் மீண்டும் இயற்றப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் அதற்கான கோரிக்கையை வைக்க வேண்டும் என்றும் கங்கனா ரனாவத் தெரிவித்தார்.
இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக செய்தி தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, "விவசாய சட்டம் குறித்து கங்கனா ரனாவத் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள். பாஜகவின் சார்பில் இவை அங்கீகரிக்கப்படவில்லை" என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த கங்கனா ரனாவத் "நிச்சயமாக நான் கூறுவது தனிப்பட்ட கருத்து" என்றும், இந்த மசோதாக்கள் மீதான கட்சியின் நிலைப்பாடு இல்லை என்று கூறியுள்ளார்.