மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரோடு இணைத்து பேசியதற்காக நடிகை கங்கனா ரனாவத்திற்கு கொலை மிரட்டல் வந்துள்ள நிலையில் ஒய் பிரிவு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்தில் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளை நடிகை கங்கனா ரனாவத் முன்வைத்து வந்த நிலையில் அவரது புகார்களை காவல்துறை சரியாக கையாளவில்லை என்றும், மும்பையில் இருப்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருப்பதை போல பாதுகாப்பற்றதாக உணர்வதாகவும் அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கங்கனாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் “அவ்வளவு பயமாக இருந்தால் மும்பைக்கு வரவேண்டாம் என்றும், மகாராஷ்டிராவை அவமதித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள கங்கனா “நான் 9ம் தேதி மும்பைக்கு வருகிறேன். முடிந்தால் என்னை தடுத்து பாருங்கள்” என கூறியுள்ளார். இந்நிலையில் கங்கனா ரனாவத்திற்கு கொலை மிரட்டல் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து பேசியுள்ள இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் “கங்கனா ரனாவத் இமாச்சலத்தின் மகள். அவருக்கு தேவையான பாதுகாப்புகளை வழங்குவது அரசின் கடமை. தேவைப்பட்டால் மாநிலத்திற்கு உள்ளேயும், வெளி இடங்களிலும் அவருக்கு பாதுகாப்பு வழங்குவோம்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.