கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் படத்தை இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார்.
கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகிறது. சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சென்னையில் நடந்தது. அதையடுத்து பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் ஐதராபாத் என விளம்பரப் பணிகளுக்காக கமல்ஹாசன் பறந்து வருகிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “சாதனை படைத்துவிட்டால் கீழே இறங்கிதான் ஆகவேண்டும். ஆனால் நான் இறங்குவதற்கு முன்பாக அடுத்த தலைமுறையில் என்னை விட சிறந்த நான்கு நடிகர்களையாவது அடையாளம் காட்டிவிட்டுதான் செல்வேன்.” எனப் பேசியுள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு இணையாக சிம்புவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் கமல்ஹாசனின் இந்த பேச்சு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.