சில தினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் நடிப்பில் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரஜினிகாந்த் சமீபகாலமாக இளம் இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
ஏற்கனவே சுந்தர் சி , ரஜினியை வைத்து அருணாசலம் என்ற ஹிட் படத்தைக் கொடுத்துள்ளார். இதனால் ஒரு ஜாலியான படமாக இந்த படம் அமையும் என ரஜினி ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி இப்போது அறிவித்து பீதியைக் கிளப்பினார். சுந்தர் சி விலகலுக்கு அவர் சொன்ன கதை ரஜினிகாந்துக்குப் பிடிக்காததுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் வேறு இயக்குனர்களிடம் தற்போது கதை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்த படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனிடம் “தலைவர் 173 படத்துக்கு இளையராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதா?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு கமல் “இது ரஜினி படம். அதனால் நான் மட்டும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது” என மழுப்பலான பதிலைக் கூறியுள்ளார். கடைசியாக ரஜினியின் வள்ளி படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதன் பிறகு 30 ஆண்டுகளாக இருவரும் இணைந்து பணியாற்ற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.