பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் வெளியாட்களை உள்ளே நுழையவிடாமல் தடுக்கும் லாபி பல ஆண்டுகாலமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34) சில தினங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பலரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் 6 மாதங்களுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரது மரணத்துக்கு பாலிவுட்டில் தழைத்தோங்கும் வாரிசு நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் மோசமான மனப்பாண்மையே காரணம் என சொல்லப்படுகிறது. பாலிவுட்டில் வெளியாட்களை தங்களுடன் சேர்த்துக் கொள்ளும் பண்பு இல்லை என்றும் பல நடிகர், நடிகைகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது இப்போது மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது சுஷாந்துக்கு ஏற்பட்ட ஒதுக்குதல் முன்பு கமல்ஹாசனுக்கும் ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமாக நடிகரும், அமிதாப் பச்சனை வைத்து பாலிவுட் படத்தை இயக்கியவருமான பாக்யராஜ் ஒரு நேர்காணலில் ‘1984 ஆம் ஆண்டு கமலும், அமிதாப் பச்சனும் இணைந்து ஒரு படத்தில் நடித்தனர். அந்த படம் கிட்டத்தட்ட 10,000 அடி வரை படம்பிடிக்கப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் படம் வெளியானால் தன்னைவிட கமலுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என நினைத்து தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் தருவதாக தெரிவித்தார்’ எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.