தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலோடு காத்திருக்கும் படங்களில் ஒன்று சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் வாடிவாசல் திரைப்படம். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும் வெற்றிமாறன் மற்றும் சூர்யா ஆகியோரின் அடுத்தடுத்த பட வேலைகளால் இந்த படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.
விடுதலை 2 திரைப்படம் ரிலீஸையடுத்து வெற்றிமாறன் தற்போது வாடிவாசல் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் வாடிவாசல் திரைப்படத்தை மூன்று பாகங்களாக உருவாக்கப்பட உள்ளதாகவும் இந்த ஆண்டு மத்தியில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சமீபத்தில் படத்துக்கான பாடல் ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தற்போது வாடிவாசல் குறித்து பேசியுள்ளார். அதில் “வாடிவாசல் படத்துக்கானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஜூலை மாதத்தில் படப்பிடிப்புத் தொடங்கும். சமீபத்தில் ஒரு பாடலை அற்புதமான வரிகளோடு பதிவு செய்துள்ளோம். வெற்றிமாறன் திரைக்கதையில் அரைமணிநேரப் பகுதியை விவரித்தார். நான் ஆச்சர்யத்தில் மூழ்கிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.