Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாதரண கடைக்காரன்தான்.. ஆனா குடும்பம்னு வந்துட்டா..! - வீர தீர சூரன் திரைவிமர்சனம்!

Advertiesment
Veera Dheera Sooran

Prasanth Karthick

, வெள்ளி, 28 மார்ச் 2025 (09:24 IST)

ஒரு ஊரில் பெரியவர் ரவி என்பவரும், அவரது மகன் கண்ணனும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் தனது கணவனை ஏதோ செய்துவிட்டார்கள் என ஒரு பெண், தனது மகளுடன் வந்து பெரியவர் வீட்டில் தகராறு செய்கிறாள். அதிலிருந்து சில மணி நேரங்கள் கழித்து அந்த பெண்ணின் கணவன் தனது மனைவியை காணவில்லை, அவள் பெரியவர் வீட்டிற்குதான் சென்றாள் என போலீஸ் எஸ்.பி அருணகிரி (எஸ் ஜே சூர்யா)யிடம் புகார் அளிக்கிறான்.

 

அருணகிரிக்கும், பெரியவர் ரவிக்கும் ஏற்கனவே முன் விரோதம் உள்ளது. அதனால் பெரியவர் ரவியையும், கண்ணனையும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி என்கவுண்ட்டர் செய்துவிட அருணகிரி நினைக்கிறார். இந்த விஷயம் பெரியவர் க்ரூப்புக்கு தெரிந்துவிட அவர்கள் அருணகிரியை முடிக்க, தங்களிடம் வேலைபார்த்த, தற்போது ரவுடியிசத்தை விட்டுவிட்டு குடும்பத்தோடு நிம்மதியாக வாழ்ந்து வரும் காளி(விக்ரம்)-ன் உதவியை கேட்கிறார்கள்.

 

அவர்களால் தனது குடும்பத்திற்கு ஏதும் ஆகக்கூடாது என்பதற்காக காளி மனமில்லாமல் ஒத்துக் கொள்கிறான். அன்றைய ஒரு நாள் இரவிற்குள் என்ன நடக்கிறது? காளி எஸ்.பி அருணகிரியை கொன்றானா? அல்லது அருணகிரியிடம் பெரியவர் ரவி, கண்ணன் சிக்கி செத்தார்களா? என ஒருவரையொருவர் வேட்டையாட துடிக்கும் இரவின் கதையாக நீள்கிறது வீர தீர சூரன்.

 

webdunia
 

வீரனாக ரவுடிகளை எதிர்கொள்வதிலும், தீரனாக தனது குடும்பத்தை காப்பாற்ற முயல்வதிலும், சூரனாக சண்டை போடுவதிலும், விக்ரம் முழுவதும் வீர தீர சூரனாக கலக்கி இருக்கிறார். காவல் நிலையத்தில் நடக்கும் ப்ளாஷ்பேக் சண்டை காட்சிகள், க்ளைமேக்ஸ் சண்டை என பல ஆக்‌ஷன்களில் பார்க்கும்போது, உண்மையிலேயே இவருக்கு 58 வயதாகிறதா என்று சந்தேகம் வரும் அளவிற்கு சுறுசுறுப்பாக இயங்குகிறார்.

 

விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் பாசம் காட்டுவதிலும், தப்பி செய்தால் அதட்டுவதிலும் இயல்பான மனைவிகளை நினைவூட்டுகிறார். எஸ் ஜே சூர்யா தனது தனித்துவமான உடல்மொழி பாவனைகள், வசனங்களை பேசும் விதத்தால் கவர்கிறார். சூரஜ் நடிப்பில் அசத்தியிருந்தாலும், அவரது மலையாள சாயல் தமிழ் பேச்சு உள்ளூர் ஆள் என்ற எண்ணத்தை தர மறுக்கிறது. பெரியவர் ரவியாக நடித்த தெலுங்கு நடிகர் ப்ரித்வி ராஜ், ஒரு பெரிய கேங் லீடருக்கான உடல்மொழி, நடிப்பை தவற விட்டிருக்கிறார். பல வில்லனிசமான தருணங்களில் கூட அப்பாவி பெரியவராகவே அவரது முகபாவனைகள் உள்ளது.

 

webdunia
 

படத்தின் அசுர பலமாக ஜிவி பிரகாஷின் பிண்ணனி இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது. ப்ரசான்னா ஜிகேவின் எடிட்டிங் படத்தை சுறுசுறுப்பாக காட்டுகிறது. முக்கியமாக போலீஸ் ஸ்டேஷனில் நொடிப்பொழுதில் துப்பாக்கியை மாட்டி லோட் செய்யும் காட்சிகளில், பாஸ்ட் கட் துருத்தாமல் மாஸ் காட்டுகிறது.

 

ஆனால் ஒட்டுமொத்தமாக படமாக பார்க்கும்போது முக்கால்வாசி படம் வரை இருந்த சுவாரஸ்யம் க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க அலுப்பை தரத் தொடங்குகிறது. க்ளைமேக்ஸ் எதை நோக்கி செல்கிறது என்பதே புரியாமல், ஒரு திருப்திகரமான க்ளைமேக்ஸாக நகராமல் அங்கும் இங்கும் அல்லாடியபடி இருந்து, கடைசியாக ஒருவழியாக முடிகிறது. மேலும் விக்ரமின் ப்ளாஷ்பேக் கதையில் வரும் அவரது நண்பன் திலீப்பை காட்டாமலே இருப்பது, கதையில் கதாப்பாத்திரங்கள் எடுக்கும் திடீர் மனமாற்றங்கள், நிலைபாடுகள் வலுவாக இல்லாமல் திடீரென நடக்கிறது. இது இரண்டாம் பாகம் என்பதால் முதல் பாகத்தில் அவற்றை விரிவாக சொல்லிக் கொள்ளலாம் என தவிர்த்திருக்கலாம், என்றாலும், அது புரியாமல் பார்வையாளர்கள் கதையை உள்வாங்கிக் கொள்வதில் சிரமம் இருக்கிறது.

 

விக்ரமின் அபாரமான நடிப்பு, அட்டகாசமான ஆக்‌ஷன் காட்சிகள், விண்டேஜ் விக்ரம் பாடலின் ரீ க்ரியேஷன் என படத்தை பார்த்து கொண்டாட பல விஷயங்கள் இருக்கிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல தடங்கல்களுக்குப் பிறகு ரிலீஸான ‘வீர தீர சூரன்’… ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!