Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"தோனி"- க்கு சவால் விடும் "கனா" திரைவிமர்சனம்!

, புதன், 19 டிசம்பர் 2018 (13:20 IST)
பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய "கனா" திரைப்படம் ஒரு கிராமத்து பெண்ணின் கனவை பிரதிபலிக்கிறது. வெறித்தனமான லட்சியத்திற்கு வரும் தடைகளை மீறி சர்வதேச கிரிக்கெட் வீராங்கனையாக எப்படி சாதிக்கிறார் என்பதை, அப்பா - மகள் பாசத்துடன்  விவசாயம், காதல், நட்பு ஆகியவற்றை  கலந்து சொல்கிறது "கனா".



 
திருச்சி அருகே உள்ள குளிதலையை சேர்ந்தவர் விவசாயி முருகேசன் (சத்யராஜ்). மனைவி மகளுக்கு பிறகு இவர் உயிராக நினைக்கும் இரண்டு விஷயம் விவசாயமும், கிரிக்கெட்டும் தான் . 
 
உலகக்கோப்பை போட்டியில் இந்தியா தோற்றுவிட, சோகத்தில் மூழ்குகிறார் முருகேசன். தனது தந்தை முதல் முறையாக அழுவதைப் பார்க்கும் மகள் கௌசல்யாவுக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்), இந்தியாவுக்காக தான் கிரிக்கெட் விளையாடி, ஜெயித்து தந்தையை சந்தோஷப்படுத்த வேண்டும் என விரும்புகிறார். இந்த ஆசை ஒரு கட்டத்தில் வெறியாக மாறிவிடுகிறது. ஆனால் பொம்பள பிள்ளைய கிரிக்கெட் விளையாட அனுமதிச்சதுக்காக, ஊரே ஒன்றுகூடி முருகேசனை ஏசுகிறது. இந்த தடைகளை எல்லாம் தாண்டி, கௌசல்யா முருகேசன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் எப்படி இடம் பிடிக்கிறார் என்பது தான் படத்தின் மீதி கதை.
 
மகளிர் கிரிக்கெட் - விவசாயம் என இருகோடுகளில் பயணிக்கிறது கனா . ஆனால் குழப்பமே ஏற்படுத்தாமல் தெளிவான திரைக்கதை அமைத்து, ஒரு பார்வையாளனுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் படத்தில் புகுத்தி,  தான் ஒரு அறிமுக இயக்குனர் என்பதனை திரையிட்டு மறைத்து "ஒரு அதிபுத்திசாலி" என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.
 
ஒரு பெண் கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் போது, அதற்கு எப்படி எல்லாம் பிரிச்சினை வரும் என்பதை மிக அழுத்தமாகவும், அதே நேரத்தில் யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறார்.
 
படத்தில் வரும் கதாபாத்திரங்களும் சரி, காட்சிகளும் சரி, மிகைப்படுத்தப்படாமல் அளவாக இருப்பது ரசிக்க வைக்கிறது. கடைசி 30 மணி நேர படம், ஒரு டிவியில் ஒளிபரப்பாகும் உண்மையான கிரிக்கெட் போட்டியை போன்றே நம்மை காண செய்கிறது. அதுவும் இந்தியா - பாகிஸ்தான் டி20 போட்டியின் கடைசி ஓவரில், இரு அணிகளுக்கும் சமமான வெற்றி வாய்ப்பு இருக்கும்போது, அனிச்சையாக நம்முள் ஏற்படும் ஒரு பதற்ற உணர்வு, இந்த படத்தை பார்க்கும் போது உண்மையாகவே ஏற்படுகிறது.
 
படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் நம்மை அறியாமல் கைத்தட்ட வைக்கின்றது. "இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற நாங்க 11 பேர் இருக்கோம்... ஆனா இந்தியாவில் விவசாயத்த காப்பாற்ற யார் இருக்கா", "ஒண்ணு லஞ்சம் கொடு இல்ல மரியாதை கொடு... ஏன்யா ரெண்டுத்தையும் கொடுத்து கெடுக்குறீங்க", போன்ற நச் வசனங்கள் பார்ப்பவர்களை சிந்திக்க வைக்கிறது . அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் ஐஸ்வர்யா பேசும் வசனத்துக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
 
முதல் காட்சியிலேயே 'நான் ஒரு கிரிக்கெட் பிளேயர் டா' என நம்பவைத்து விடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.  தனக்கு கொடுப்பட்ட கதாபாத்திரத்தில் தன்னை தூக்கி நிலை நாட்டியிருக்கிறார். அவர் பௌலிங் செய்யும் அந்த காட்சிகளை பார்க்கும் போது அவர் பிறவி கிரிக்கெட் பிளேயரோ என தோன்றுகிறது அந்த அளவிற்கு தனது நடிப்பில் சாதனை படைத்திருக்கிறார் ஐஸ் . 
 
செல்ல மகளின் பாசமான அப்பாவாக பின்னி எடுத்திருக்கிறார் சத்யராஜ். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இன்னனும் நம்மை ரசிக்க வைக்கும் ஒரே நடிகர் அவர் . "பசி இருக்குற வரைக்கும் விவசாயத்தை ஒன்னும் பண்ண முடியாது" என்ற உணர்வு பூர்வமான வசனங்களால்  அச்சு அசலான ஒரு டெல்டா விவசாயியை நம் கண்முன் நிறுத்தி விட்டார்.
 
சத்யராஜுக்கு இணையாக பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பாத்திமா. ஒரு சராசரி கிராமத்து தாயாக சரியான உணர்வுகளை அளவுடன் வெளிபடுத்துகிறார். 
 
அரை மணி நேரமே வந்தாலும் பவர்புல் கேரக்டர் சிவகார்த்திகேயனுக்கு. ஒரு தயாரிப்பாளராக அவ்வளவு நியாயம் செய்திருக்கிறார். முதல் தயாரிப்பிலேயே தரமான படமாக தந்திருக்கிறார். ஒரு பர்பெக்ட் கிரிக்கெட் கோச்சுக்கான உடல் மொழியுடன் அவர் பேசும் வசனங்கள் எல்லாம், வெற்றிக்கான பாசிடிவ் எனர்ஜி டானிக். " இந்த உலகம் ஜெயிக்கிறேன்னு சொன்னா கேட்கமாட்டாங்க... ஜெயிச்சவன் சொன்னா தான் கேட்பாங்க.. ஜெயிச்சுட்டு பேசு " என அவர் சொல்லும் போது நம்மை அறியாமல் கைதட்டிவிடுகிறோம்.
 
தர்ஷனுக்கு இது முதல் படம் என்றாலும் செம படம். ஒரு தலை காதலனாக ஐஸ்வர்யாவுக்காக அவர் செய்யும் அலப்பறைகள் ரசிக்க வைக்கின்றன. அவருடன் வரும் சச்சின் மற்றும் டெண்டுல்கர் சிரிக்க வைக்கிறார்கள். அதேபோல கௌசிக் பாய்ஸ் ஆக வரும் அத்தனை இளைஞர்களுமே எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள். முனிஸ்காந்த் மட்டும் தான் கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங். ஆனா அது பெரிய குறையா ஒன்றும் தெரியவில்லை.
 
படத்தின் மிகப்பெரிய பக்கபலம் என்றால் அது இசை தான். வாயாடி பெத்த புள்ள உள்பட படத்தில் வரும் அத்தனை பாடல்களுமே திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசை தான் படத்தை வேறு லெவலக்கு கொண்டு செல்கிறது. 
 
படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி செதுக்கி உருவாகியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். கிராமத்து பசுமை, வெறுமை, உணர்வுகள், கிரிக்கெட் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக படம்பிடித்து காட்டுகிறார். இதனை அவ்வளவு விறுவிறுப்பாக எடிட் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ரூபன். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் கிரிக்கெட் மேட்ச் செம பர்பெக்ட்.
 
பெண் பிள்ளைகள் இதை செய்யலாம், இதனை செய்யக் கூடாது என நாம் ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற பலமான கேள்வியை ஒவ்வொரு ஆண் மகனையும் சிந்திக்க வைத்திருக்கின்றனர். 
 
படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களே கனா படத்தை நீங்கள் முதன்முதலாக இயக்கிய படம் என்றால் எங்களால்  சற்றும் நம்பமுடியவில்லை. உங்கள் கனா இந்த "கனா" -வில்  பலித்துவிட்டது  இப்போ நீங்க சொன்னா இந்த உலகம் கேட்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓடி ஒளியும் விஷால்: கிழித்து தொங்கவிட்ட எஸ்.வி.சேகர்