வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்த விஜய் அந்த படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்தார். விஜய் அரசியலுக்கு செல்லவிருப்பதால் அதுவே அவரின் கடைசி படம் என விஜயே அறிவித்தார். இது விஜய் ரசிகர்களை சோகப்படுத்தினாலும் விஜயை அரசியல்வாதியாக பார்க்கும் ஆர்வமும் அவர்களுக்கு இருக்கிறது.
தெலுங்கில் பாலையா என அழைக்கப்படும் பாலகிருஷ்ணா நடித்து வெற்றி பெற்ற பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஜனநாயகன் என சொல்லப்படுகிறது. மேலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றவாறும், விஜய்க்கு பொருந்துவது போலவும் சில மாற்றங்களை ஹெச்.வினோத் செய்திருக்கிறார் என சொல்கிறார்கள். சிலரோ படத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை அப்படியே எடுத்திருக்கிறார்கள் எனவும் சொல்கிறார்கள்.
விஜய் தற்போது அரசியலில் இருப்பதால் ஜனநாயகனின் அரசியல் தொடர்பான சில காட்சிகள் வருவதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம் 2026 ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. பொதுவாகவே விஜய் நடிக்கும் புது படத்தின் இசை வெளியீட்டு விழா என்றால் விஜய் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள். அதற்கு காரணம் விஜயை நேரில் பார்க்க முடிவதோடு, விஜய் பேசுவதையும் கேட்க முடியும் என்பதுதான் .இதுவரை விஜய் நடித்த படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில்தான் நடைபெற்று வந்தது.
ஆனால் இந்த முறை மலேசியாவில் நடக்கவிருக்கிறது. ஆமாம்.. ஜனநாயகன் படத்தின் இசை வெளியிட்டு விழா வருகிற டிசம்பர் 27ம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீஸ் என்கிற அரங்கில் நடைபெறவிருக்கிறது. இந்த அறிவிப்பு தொடர்பான வீடியோவை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறது. மேலும் மலேசியாவில் உள்ள விஜய் ரசிகர்கள் விஜய் குறித்து உணர்வுபூர்வமாக பேசும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது.