‘இந்தியன் 2’ விபத்துக்கு இதுதான் காரணம்: இயக்குனர் அமீர் பகீர் பேட்டி

ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (16:58 IST)
கடந்த வாரம் கமலஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் திடீரென கிரேன் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர் என்பது தெரிந்ததே. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த விபத்து குறித்து திரையுலகைச் சேர்ந்த பலர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் அமீர் இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
 
ஷங்கர் படம் என்பதால் மூன்று பேரின் உயிர் இழப்பு பெரிதாகப் பேசப்படுகிறது. இதுபோன்று தமிழ்சினிமாவில் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. திரைப்படத் தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. கோடி கோடியாய் கொட்டி பணம் எடுக்கும் இந்த தொழிலில் உரிய பாதுகாப்பு விஷயங்கள் கடைபிடிக்கப்படுவதில்லை. ஈ.வி.பி படப்பிடிப்பு தளத்தில் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் கிடையாது.
 
பொருத்தமில்லாத கிரேன் பயன்படுத்தியதே 3 பேரின் உயிரிழப்புக்கு காரணம். சினிமாவுக்கு சம்பந்தமில்லாத ஹைட்ராலிக் கிரேன் இதில் பயன்படுத்தப்படுகிறது. மேலே உயர்த்தியபடி இருந்த நிலையில் கிரேனை அங்கிருந்து நகர்த்தியதால் தான் விபத்து நிகழ்ந்திருக்கிறது. கீழே இறக்கிய பின்னர் தான் நகர்த்த வேண்டும்.
 
ஆனால் கிரேன் ஆபரேட்டரிடம் அப்படியே நகர்த்துமாறு உத்தரவு வந்திருக்கலாம். அந்த அடிப்படையில் அவர் நகர்த்தியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் படப்பிடிப்பை நடத்த வேண்டும் முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் மூன்று பேரின் உயிரை பலி வாங்கி இருக்கிறது’ இவ்வாறு இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் உங்களை விட்டு எங்கும் போக மாட்டேன்: ரசிகர்களுக்கு சிம்பு வாக்குறுதி!