இந்த வருடத்தில் அதிக படங்களில் நடித்த ஹீரோக்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
தற்போதைய டாப் ஹீரோக்களில் பிசியான நடிகர் விஜய் சேதுபதிதான். ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. அவர் ரஜினியுடன் நடித்துள்ள ‘பேட்ட’, தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடித்துள்ள, ’சூப்பர் டீலக்ஸ்’, மணிகண்டனின் ’கடைசி விவசாயி’, தெலுங்கில் நடித்திருக்கும் ’சைரா நரசிம்மா ரெட்டி’, சீனு ராமசாமியின் ’மாமனிதன்’ ஆகிய படங்கள் அடுத்த வருட ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. இதோடு இன்னும் சில படங்களும் வெளியாகும் என்று தெரிகிறது.
இதற்கிடையே இந்த வருடம் அதிக படங்களில் நடித்த ஹீரோவாக, விஜய் சேதுபதி தேர்வாகியிருக்கிறார். 2018 ஆண்டின் துவக்கத்திலுருந்து தற்போதுவரை அவர், 7 படங்களில் நடித்துள்ளார்.
ஆறுமுக குமார் இயக்கத்தில், ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’,
கோகுல் இயக்கத்தில் ‘ஜூங்கா’,
மணிரத்னம் இயக்கிய, ‘செக்க சிவந்த வானம்’,
பிரேம் குமார் இயக்கிய ’96,
விக்கி இயக்கிய ‘டிராபிக் ராமசாமி’ (கெஸ்ட் ரோல்),
அஜய் ஞானமுத்து இயக்கிய ‘இமைக்கா நொடிகள்’,
பாலாஜி தரணிதரன் இயக்கிய ’சீதக்காதி’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இதில், ’96’ படம் சூப்பர் ஹிட்டானது. இந்த வருடம் பரபரப்பாகப் பேசப்பட்ட படமும் அதுதான். இந்த படத்தின் ஜானு- ராம் கேரக்டர் பெயர் சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ’ஜூங்கா’வும் ’சீதக்காதி’யும் சரியான வசூலை தரவில் லை.
அவர் நடித்த ஏழு படங்களில், ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ -ல் கவுதம் கார்த்திக்கும், ’செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்பு, அருண் விஜய், அரவிந்த்சாமி ஆகியோருடனும், ’இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வா, அனுராக் காஷ்யப் ஆகியோருடனும் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் நடிப்பில் பேட்ட, சூப்பர் டீலக்ஸ், கடைசி விவசாயி ஆகிய படங்கள் ஏற்கனவே ரெடியாகிவிட்டதால், அடுத்த வருடமும் அவர்தான் அதிக படங்களில் நடித்த டாப் ஹீரோவாக இருப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.