ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளியாகியுள்ள படம் குட் பேட் அக்லி. சிம்ரன், த்ரிஷா, பிரியா வாரியர், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பல பகுதிகளில் நாஸ்டால்ஜியாவிற்காக பழைய பட பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறாக கமல்ஹாசன் நடித்து வெளியான சகலகலா வல்லவன் படத்தில் வரும் இளமை இதோ இதோ என்ற பாடலை அஜித்தின் சண்டை காட்சி ஒன்றில் பயன்படுத்தி இருந்தனர். அதுபோல அர்ஜூன் தாஸ் எண்ட்ரிக்கு ஒத்த ரூபா தாரேன் என்ற பழைய பாடலை பயன்படுத்தி இருந்தனர். இந்த பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா.
இதையடுத்து இளையராஜா குட் பேட் அக்லி படக்குழுவிற்கு நோட்டிஸ் அனுப்பினார். தன்னுடைய அனுமதி இல்லாமல் தான் இசையமைத்த பாடல்களை படத்தில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அவர் அதற்கு இழப்பீடாக ரூ.5 கோடி தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வழக்குத் தொடரப்படும் என்றும் கூறியிருந்தார். ஆனால் சட்டப்பூர்வ உரிமையாளரிடம் பணம் பெற்றுக்கொண்டுதான் அந்தப் பாடலை பயன்படுத்தினோம் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள இளையராஜா “சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து அனுமதிப் பெற்றதாக சொன்னாலும், அந்த நபர் யாரென்று சொல்லவில்லை.” எனக் கூறி மனுத்தாக்கல் செய்துள்ளார்.