ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹிப்ஹாப் ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி, இசையமைத்து உருவாகியிருந்த "கடைசி உலகப்போர்" கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியானது. மாறுபட்ட களத்தில், போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியிருந்த இப்படம், ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியங்களைத் தந்து, மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.
அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், ரசிகர்களிடம் மட்டுமல்லாது, விமர்சகர்களிடமிருந்து பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ளது. விநியோகஸ்தர்களின் தொடர் வேண்டுகோள்களைத் தொடர்ந்து, தற்போது இப்படம் நம் மொழியைத் தாண்டி, வட இந்தியாவில் இந்தி மொழியில் வெளியாகிறது.
முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்கள் மட்டுமே இந்தி டப்பிங்கில் வெளியாகி வந்த நிலையில், தற்போது கடைசி உலகப்போர் படம் மூலம் பான் இந்திய நடிகராக மாறியுள்ளார் ஹிப் ஹாப் ஆதி.
ராப் பாடகராக அறிமுகாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றுள்ளார், மேலும் பான் இந்திய நடிகராக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் நாசர், நட்டி, அனகா, என். அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், சிவா ஷரா RA,FJ,குஹன் பிரகாஷ், ராக்கெட் ராஜேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.