சசிகுமார், பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் இரா சரவணன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான திரைப்படம் நந்தன். ரிலீஸுக்கு முன்பே இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சக சினிமா கலைஞர்கள் மற்றும் சீமான் உள்ளிட்ட அரசியல்வாதிகள் படத்தைப் பார்த்து பாராட்டிப் பேசியிருந்தனர். படம் பாராட்டுகளைப் பெற்றாலும் பெரிய அளவில் ரசிகர்களை திரையரங்குக்குள் ஈர்க்கவில்லை. இந்நிலையில் இந்த படம் பற்றி இயக்குனர் கோபி நயினார் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
அதில் “இந்தியாவில் இன்னும் விவாதத்திற்கு உட்பட்டிருக்கும் சனநாயக உரையாடலான, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அதிகாரத்தை நேர்மையான திரைக் கதையின் வழியாக தன் சொந்த மக்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறது "நந்தன்".
இந்தத் திரைப்படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் நடித்தவர்கள் எல்லோருமே சமூகம் பொறுப்புள்ளவர்களாகவே இருந்தார்கள் என்பதுதான். குறிப்பாக இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி. "இன்னும் ஜாதி இருக்கிறதா என கேட்பவர்களுக்கு, என்னுடன் வாருங்கள் இந்தியாவில் ஜாதி இருக்கிறது என்று அழைத்துச் சென்று காட்டுகிறேன்..." என்ற வாசகத்துடன் துவங்குகிறது இத்திரைப்படம்.
சனநாயகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட இயக்குநர் இரா. சரவணனின் தைரியத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். காலனிக்குள் இன்னும் அனுமதிக்கப்படாத நந்தன் எனும் தேரை, தன் முதுகில் சுமந்து வந்த இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாரை, இன்னும் நாடு முழுவதும் கொடியேற்ற முடியாமல், நாற்காலியில் அமர முடியாமல், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நுழைய அனுமதிக்காத படி தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட எண்ணற்ற தலித் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் சார்பாக நெஞ்சுயர்த்தி நன்றியை சொல்லிக் கொள்கிறோம்.
தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள், நந்தன் எனும் இத்திரைப்படம் சமூக நீதியோடு தொடர்புடையது என்பதால்... தமிழ்நாடு அரசின் உயரிய சிறப்பு கலை விருதினை நந்தன் திரைப்படத்திற்கு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் இருக்கும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நந்தன் திரைப்படத்தை காண வேண்டிய சமூக அரசியலுக்கான அவசியத்தை உணரும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு அறிவுறுத்தலை வழங்குவது என்பது சமூக நீதியோடு தொடர்புடையது என்பது என் பணிவான கருத்து.
நந்தன் திரைப்படம் சனநாயக அறிவியல் கல்விக்கான திரைப்படம் என்பதால் இளம் தலைமுறையினருக்கும் மாணவ மாணவியருக்கும் போய் சேர வேண்டிய அவசியம் கருதி அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் வழியாக நந்தன் திரைப்படத்தை காண வழிவகை செய்ய வேண்டும். கோபி நயினார், திரைப்பட இயக்குநர்.” எனக் கூறியுள்ளார்.