கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளைக் கடந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகவில்லை.
இப்போது வரை அந்த படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த படத்தில் முதலில் சூர்யா நடிக்க இருந்து பின்னர் மறுத்தது குறித்து கௌதம் மேனன் தனது ஆதங்கத்தை சமீபத்தில் ஒரு நேர்காணலில் வெளிப்படுத்தி இருந்தார். அதில் “துருவ நட்சத்திரம் கதையை சூர்யா மறுத்ததைதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் இருவரும் இணைந்து காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் கொடுத்திருக்கிறோம். ஒருவேளை அந்த படம் தவறாகியிருந்தால் கூட என்ன ஆகியிருக்கும்? சூர்யாவுக்கு அடுத்த படம் வராமல் போய்விடுமா? நான்தானே படத்தைத் தயாரிக்கிறேன்? என்னை நம்பி அவர் வந்திருக்க வேண்டும்.” எனக் கூறியிருந்தார்.
இது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கிய நிலையில் இப்போது கௌதம் மேனன் தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் “சூர்யா மேல் வருத்தமோ கோபமோ இல்லை. அந்த நேர்காணலில் சூர்யா பற்றி பேசவேண்டும் என்பதற்காக அப்படிப் பேசவில்லை. சூர்யா அந்த படத்த்தில் நடித்திருந்தால் வேறு மாதிரி வந்திருக்கும். இப்போது விக்ரம் அதில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அந்த படத்தை நான் பெரிதும் நம்பி இருக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.